நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு ஒரு வார பயணமாக வருகை தந்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கியிருக்கிறார். இன்று காலை ஊட்டி அருகிலுள்ள முத்தோரை பாலாடா பகுதிக்குச் சென்ற ஆளுநர், அங்குள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தைப் பார்வையிட்டு, நீலகிரியில் வாழ்ந்துவரும் பழங்குடிகள் குறித்துக் கேட்டறிந்தார். தொடர்ந்து, அதே வளாகத்தில் இயங்கிவரும் மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக்குச் சென்றார். பழங்குடி மாணவ, மாணவிகளின் தங்கும் விடுதிகளை ஆய்வுசெய்தார். அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
ஏகலைவா பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர் ஆர்.என் ரவி, “மாணவர்கள் ஒரு லட்சியத்தை அடைய தொடர்ந்து கனவுகாண வேண்டும். அந்தக் கனவை நிஜமாக்க பாடுபட வேண்டும். மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முன்னேற்றம் அடைய வேண்டும். மேலும், மாணவர்கள் தங்களை இணையதளம் மூலம் தொடர்புபடுத்திக்கொண்டு பல்வேறு தகவல்களையும் அறிந்துகொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்க வேண்டும். மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பாடுபட வேண்டும். அடிப்படைக் கல்வியைச் சிறந்த முறையில் வழங்க வேண்டும்” என்றார்.