இயக்குனருக்கு கார்… 13 உதவி இயக்குனர்களுக்கு பைக் : ‛விக்ரம்' கமல் தாராளம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் மற்றும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்து கடந்த ஜூன் 3ல் திரைக்கு வந்த படம் ‛விக்ரம்'. நான்கு ஆண்டுகளுக்கு பின் கமல் நடிப்பில் படம் வெளியானதால் ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். அதற்கு ஏற்றபடி படமும் ஆக் ஷன் கதையில் ரசிகர்களை கவர படம் வசூலையும் அள்ளி வருகிறது. 4 நாட்களில் 125 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட இடைவெளிக்கு பின் கமல் படம் சூப்பர் ஹிட்டாகி இருப்பதால் கமலே மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளரும் கமல் என்பதால் இந்த படம் மூலம் அவருக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது. இந்த மகிழ்ச்சியை படக்குழுவோடு கொண்டாடி வருகிறார் கமல். படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு லெக்சஸ் ரக சொகுசு காரை பரிசாக வழங்கி உள்ளார் கமல். அதோடு இந்த படத்தில் உதவி இயக்குனர்களாக பணியாற்றிய 13 பேருக்கும் தலா டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 ரக பைக் பரிசாக வழங்கி உள்ளார்.
5 மொழிகளில் கமல் நன்றி
இதனிடையே விக்ரம் படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது. தமிழ் தவிர்த்து பிற மொழிகளிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது. இதனால் ஒவ்வொரு மொழிக்கு தனித்தனியாக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் கமல். அதில் தமிழில் பேசிய வீடியோவில் அவர் கூறும்போது, ‛‛தரமான படங்களையும், நடிகர்களையும் தாங்கி பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியது இல்லை. அந்த வெற்றி வரிசையில் என்னையும், எங்கள் 'விக்ரம்' படத்தையும் நீங்கள் தேர்ந்தெடுத்தது எங்கள் பாக்கியம்.
தம்பிகள் விஜய் சேதுபதி, பஹத் பாசில், செம்பன் வினோத், நரேன் என வீரியமிக்க நடிகர் படை இதற்கு முக்கிய காரணம். கடைசி 3 நிமிடங்கள் வந்து திரையரங்குகளை அதிர வைத்த தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே நடித்தார். நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம். லோகேஷிற்கு சினிமாவிலும், என் மீதும் இருக்கும் அன்பு, படப்பிடிப்பில் ஒவ்வொரு நாளும், படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. ரசிகர்களின் அன்பும் அவ்வாறே இருக்கிறது. உங்கள் அன்பு தொடர விழையும் ராஜ்கமல் இன்டர்நேஷனலின் ஊழியன், உங்கள் நான்''.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.