இலங்கையின் நிலை மோசமடையும் – ஐநா கடும் எச்சரிக்கை


எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவு பாதுகாப்பு மேலும் மோசமடையும் என உலக உணவுத் திட்டமும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனமும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இலங்கை அரசாங்கத்தால் இரசாயன பசளைக்கு தடை விதிக்கப்பட்டமையால் நாட்டிற்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.

இலங்கையில் வருமானம் குறைந்துள்ளமை மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் என்பன போதிய அளவு உணவு உட்கொள்வதில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் பட்டினி அபாய நாடுகள் மற்றும் அடுத்த மூன்று மாதங்களில் மிக மோசமான உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் நாடுகள் என இந்த அறிக்கை பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கையின் நிலை மோசமடையும் - ஐநா கடும் எச்சரிக்கை

இலங்கையில் மேலும் பணவீக்கம் உயரும்

அதிகரித்து வரும் உணவுப் பொருட்களுக்கான செலவுகள், எண்ணெய் மற்றும் இறக்குமதிப் பொருட்களின் விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமை, நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பனவற்றினால் 2022ம் ஆண்டில் இலங்கையில் பணவீக்கம் மேலும் அதிகரித்துச்செல்லுமென அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜூன் மற்றும் செப்டம்பர் காலப்பகுதிக்குள் இலங்கையின் உணவுக்கான பற்றாக்குறை ஏற்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டிற்கு அதிக வருமானத்தை பெற்றுக்கொடுக்கும் பெரும்போகத்தில் எதிர்பார்க்கப்பட்ட அறுவடையானது, சாதாரண எதிர்பார்ப்பை விடவும் குறைந்துள்ளது.

2021 ஏப்ரல் மற்றும் நவம்பர் மாத காலப்பகுதிகளுக்குள் இரசாயன பசளை மற்றும் களை நாசினிகளுக்கு தடை விதிக்கப்பட்டமையே இதற்கான பிரதான காரணம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் நிலை மோசமடையும் - ஐநா கடும் எச்சரிக்கை

ஜூலை மாதத்தில் இலங்கையின் நிலைமை குறித்து மதிப்பீடு

இந்நிலையில், உலக உணவுத் திட்டமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு என்பனவும் இலங்கையின் உணவு பாதுகாப்பு நெருக்கடியைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளன.

இரசாயன மற்றும் சேதன பசளைக்கான நிதியுதவியை சர்வதேசத்திடமிருந்து உடனடியாக பெற்றுக்கொள்ளல், கால்நடை துறையும் நலிவடைந்து வருவதால், அதிக ஊட்டச்சத்துள்ள கால்நடைத் தீவனம் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்து கால்நடை வளர்ப்பை வலுப்படுத்துதல்.

இடை போகத்தில் குறுகிய கால செய்கையாக பாசிப்பயறு செய்கையை ஊக்குவித்தல் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான நிதியை நிபந்தனையின்றி வழங்குதல், நெல் சேமிப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் தினக்கூலி பெறுவோருக்கு ஒத்துழைப்பு வழங்குதல், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பதற்கும் ஒரு பணியகத்தை நிறுவுதல் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் ஜூலை மாதத்தில் இலங்கையின் நிலைமை குறித்து மதிப்பீடு செய்யவுள்ளதாகவும் உலக உணவுத் திட்டமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.