நுபுர் சர்மா சர்ச்சைப் பேச்சால் காத்திருக்கும் ஆபத்து அரபு நாடுகளுடனான வர்த்தக உறவில் விரிசல் வருமா?:எண்ணெய் தேசங்களை நம்பியுள்ள 89 லட்சம் இந்தியர்களின் கதி என்ன?: உணவு பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதி வாய்ப்புகளும் பறிபோகும் அபாயம்

முகமது நபிகள் குறித்து பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா கூறிய சர்ச்சைக் கருத்து, உலகம் முழுவதும் விவாதப்பொருளாகி இருக்கிறது. நுபுர் சர்மாவை, பாஜ சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுபோன்று, சமூக வலைதளத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்ட டெல்லி பாஜ செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் உலக அளவில் இந்தியாவுக்கு எதிரான கண்டனங்கள் குவிய முக்கிய காரணமாகி விட்டது. இதில் குறிப்பாக, அரபு நாடுகளில் இருந்து வந்துள்ள அழுத்தம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. துபாய், கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்நாடுகளின் இந்திய தூதர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளன.  சவூதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளும் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. அரபு நாடுகளின் எதிர்ப்பு குரல்கள் இந்த அளவுக்கு ஆட்டம் காணச் செய்திருப்பதற்கு முக்கிய காரணம், இந்த நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவுதான். வெளிநாடுகளுக்கு வேலை தேடிச்செல்லும் இந்தியர்கள் பெரும்பாலானோர், அரபு நாடுகளில்தான் தஞ்சம் அடைந்துள்ளனர்.  இந்தியர்கள் பலரின் முக்கிய வாழ்வாதாரமாக சவூதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் உள்ளன. வளைகுடா நாடுகளில் மொத்தம் 89 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 34,25,144. இது அந்த நாட்டின் மக்கள் தொகையில் 34.6 சதவீதம். இதுபோன்றே, குவைத்தில் 10,29,861 பேர், அதாவது, அந்நாட்டு மக்கள் தொகையில் 24.1 சதவீதம் பேர் இந்தியர்களாக உள்ளனர். இதுதவிர ஓமனில் 7,81,141 பேர், கத்தாரில் 7,46,550 பேர், பஹ்ரைனில் 3,26,658 லட்சம் பேர் என, அந்நாட்டின் மக்கள் தொகையில் மிக குறிப்பிடத்தக்க அளவுக்கு இந்தியர்கள் உள்ளனர். ஜோர்டான், ஈராக், லெபனானில் குறைந்த எண்ணிக்கையிலான இந்தியர்கள்தான் பணி புரிகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட், துபாய், குவைத், கத்தார், பாகிஸ்தான் உள்ளிட்ட 15 நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, அங்குள்ள இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளன. மேலும், இந்திய பொருட்களும் புறக்கணிக்கப்பட்டன. இந்த நாடுகளில் உள்ள பெரிய சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்டவற்றில், விற்பனைக்கு வைத்திருந்த இந்திய பொருட்களை அப்புறப்படுத்தி விட்டனர். சில இடங்களில், இந்திய பொருட்களை மூடி வைத்து விட்டு, அவை விற்பனைக்கு அல்ல எனவும் எதிர்ப்புக்களை பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமின்றி, இந்தியர்களும் அங்கு சூப்பர் மார்க்கெட்கள் வைத்துள்ளனர். இவையும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.  இதனால்தான், அரபு நாடுகளின் எதிர்ப்பு, அங்குள்ள இந்தியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும் பகுதி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதிலும் வளைகுடா நாடுகளின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதாவது, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈராக்கின் பங்களிப்பு 22 சதவீதமாக உள்ளது. பிற நாடுகளை பொறுத்தவரை, சவூதி அரேபியா 19 சதவீதம், ஐக்கிய அரபு எமிரேட் 9 சதவீதம், குவைத் 5 சதவீதம், ஈரான் 2 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன.  இந்தியர்களின் வாழ்வாதாரம் ஒருபுறம், வர்த்தக உறவு மறுபுறம் என இந்தியாவுடனான அரபு நாடுகளின் உறவு பின்னிப் பிணைந்ததாக உள்ளது. எப்படி இருப்பினும் அரபு நாடுகள் இந்தியாவால் சற்றும் புறக்கணிக்க முடியாத அளவுக்கு இந்தியாவுடன் வர்த்தக ரீதியான உறவை கொண்டுள்ளது. மேலும், வர்த்தக வாய்ப்புகள் மட்டுமின்றி பல லட்சம் இந்தியர்களின் வாழ்வாதாரமும் இதில் அடங்கியுள்ளதால், வெறுப்பு பேச்சுக்களால் இவற்றுக்கு பங்கம் ஏற்பட்டு விடாத அளவுக்கு ஒன்றிய அரசு தீர்வு காண வேண்டும் என்பதை அரசியல் நோக்கர்களும், வர்த்தக உறவை மேம்படுத்த ஆர்வம் காட்டும் சந்தை நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர்.இருதரப்பு வர்த்தகம் கச்சா எண்ணெய்க்கு அரபு நாடுகளை இந்தியா சார்ந்திருப்பது போல், பல்வேறு தேவைகளுக்கு இந்தியாவையும் அரபு நாடுகள் சார்ந்திருக்கின்றன. அமெரிக்காவை அடுத்து, இந்தியாவின் ஏற்றுமதியில் 2வது பெரிய நாடாக வளைகுடா நாடுகள் உள்ளன. கடந்த 2021-22 நிதியாண்டில், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் இந்தியா இடையே மட்டும், ரூ5,61,330 கோடி அளவுக்கு இருதரப்பு வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு ரூ2,18,680 கோடி. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின்படி வரும் 2026ம் ஆண்டில் மேற்கண்ட வர்த்தகம் சுமார் 10,000 கோடி (சுமார் ரூ7,70,000 கோடி) டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.   வளைகுடா கூட்டுறவு கவுன்சில் கூட்டுறவு நாடுகளில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. வளைகுடா நாடுகளுடனான வர்த்தக உறவில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி 28 சதவீதமும், இறக்குமதி 72 சதவீதமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இறக்குமதியை சார்ந்துள்ள வளைகுடா நாடுகள்வளைகுடா நாடுகள் தங்களின் உணவு தேவையில் 85 சதவீதமும், தானியங்களில் 93 சதவீதமும் இறக்குமதியை சார்ந்துள்ளனர். குறிப்பாக, இந்தியாவில் இருந்து அரிசி, மாட்டிறைச்சி, பழங்கள், மீன், மசாலா பொருட்கள், காய்கறிகள், சர்க்கரை அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. தற்போதைய சர்ச்சையால் மேற்கண்ட ஏற்றுமதி வாய்ப்புகளும் பறிபோகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தங்கள் நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகின்றனர். இந்த வகையில் உலகிலேயே அதிகமாக அதாவது, ஆண்டுக்கு 8000 கோடி டாலர், இந்திய மதிப்பில் சுமார் (ரூ6.16 லட்சம் கோடி) அனுப்புகின்றனர். இதில் ஏறக்குறைய பாதி அளவுக்கு வளைகுடா நாடுகளில் இருந்துதான் அனுப்பப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி பங்களிப்பு, நாடு வாரியாக சதவீதத்தில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.