பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி வார்டு மறுவரையறை குறித்த வரைவு அறிக்கையில் குளறுபடிகள் இருப்பதால், நகர வளர்ச்சி துறை திருப்பி அனுப்பி இருந்தது. தற்போது மீண்டும் அந்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.பெங்களூரு மாநகராட்சி கவுன்சிலர்களின் பதவி காலம், 2020 செப்டம்பரில் நிறைவு பெற்றது.
புதிய கவுன்சிலர்களுக்கான தேர்தல் இதுவரை நடக்கவில்லை. விரைவில் தேர்தல் நடத்தக் கோரி, காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர்கள் சிவராஜ், அப்துல் வாஜித் ஆகியோர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.தற்போதுள்ள 198 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தும்படி, 2020 டிசம்பர் 4ல் தீர்ப்பு வந்தது. பெங்களூரு மாநகராட்சி சட்டம் 2020 கொண்டு வரப்பட்டுள்ளதால், அதன்படி வார்டுகள் எண்ணிக்கை 198லிருந்து, 243 ஆக உயர்த்தப்பட வேண்டும். வார்டு மறுவரையறை செய்த பின், தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்’ என, கர்நாடக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இதில், எட்டு வாரங்களுக்குள் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை முடிக்கும்படி கர்நாடக அரசுக்கும்;
அதன்பின் ஒரு வாரத்திற்குள் தேர்தல் நடைமுறைகளை துவங்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 20ல் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து, வார்டு மறுவரையறை குறித்து அரசு நியமித்த குழுவினர், வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்து நகர வளர்ச்சி துறையிடம் தாக்கல் செய்திருந்தனர். அதில் குளறுபடிகள் இருப்பதால் அறிக்கையை திருப்பி அனுப்பி இருந்தது.ஆனால், உச்ச நீதிமன்றம் எட்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இருந்ததால், வார்டு மறுவரையறை அறிக்கை நேற்று முன்தினம் மீண்டும் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில், 243 வார்டுகளும் தலா 28 ஆயிரம் மக்கள் தொகை இருக்கும் வகையில் பிரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
Advertisement