தனிப்படை போலீசாரிடம் சிக்காமலிருக்க பிரபல ரவுடிக்கு உதவி செய்த சேலம் மத்திய சிறை வார்டன்கள் இரண்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி வசந்த், குற்ற வழக்கில் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து ரவுடி வசந்த் ஜாமீன் பெற்று வெளியே வரவிருந்த நிலையில், வேறொரு வழக்கில் வசந்த்தை கைது செய்ய தனிப்படை போலீசார் சேலம் மத்திய சிறை முன்பு காத்திருந்த்தனர்.
ஆனால், குறிப்பிட்ட நேரம் முடிந்த பின்பும் வசந்த் வெளியே வராத காரணத்தால் தனிப்படை போலீசார் சேலம் மத்திய சிறை நிர்வாகத்திடம் விசாரித்துள்ளனர். அப்போது ரவுடி வசந்த் சிறையிலிருந்து 11:30 மணிக்கு விடுவிக்கப்பட்டதாக தெரியவந்தது.
இதையடுத்து சேலம் மத்திய சிறையில் இருந்து வெளியே வர பிரதான நுழைவு வாயில் ஒன்று மட்டுமே உள்ள நிலையில் தனிப்படை போலீசாரின் பிடியில் சிக்காமல் ரவுடி வசந்த் வெளியே சென்றது குறித்து தனிப்படை போலீசார் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் சேலம் மாநகர காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சேலம் மத்திய சிறை வார்டன்களாக பணிபுரியும் ரமேஷ் மற்றும் பூபதி ஆகியோர், சிறை கேன்டீன் ஷட்டரை திறந்து ரவுடியை வெளியே அனுப்பியது தெரியவந்தது. இதனையடுத்து ரமேஷ் மற்றும் பூபதி ஆகிய இருவரை பணி இடைநீக்கம் செய்து சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM