சென்னை: ரயில்வே திட்டங்களுக்காக 2022-23-ம் நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.3,865 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இரட்டை ரயில் பாதை, 3-வது ரயில் பாதை, அகலப்பாதை அமைத்தல் மற்றும் மின்மயமாக்கல் போன்ற பல்வேறு ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக, 2022-23 நிதியாண்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு வருடாந்திர பட்ஜெட் செலவாக ரூ.3,865 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 2014-15 நிதியாண்டின் வருடாந்திர செலவினத்துடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
67 சதவீதம் செலவினம் அதிகரிப்பு
கடந்த 8 ஆண்டுகளுக்கான, அதாவது, 2014 முதல் 2022 வரையிலான சராசரி செலவீனத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு நிதியாண்டின் செலவினம் 67 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் பழநி – பாலக்காடு, செங்கோட்டை – புதிய ஆரியங்காவு, பொள்ளாச்சி – போத்தனூர், திருவாரூர் – காரைக்குடி, மதுரை – தேனி ஆகிய ஊர்களுக்கு இடையே 400 கி.மீ. மீட்டர்கேஜ் ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
15 ரயில் நிலையங்களில்…
இதேபோல, கல்லக்குடி – அரியலூர், செங்கல்பட்டு – மதுராந்தகம், தொழுப்பேடு – பேரணி, ஓமலூர் – மேட்டூர் அணை, தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் – பேசின் பிரிட்ஜ் சந்திப்பு உள்பட 15 ரயில் நிலையங்களுக்கு இடையே 639.22 கி.மீ. தூரத்துக்கு 2, 3 மற்றும் 4 வது ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் 1,664 கி.மீ. தூர ரயில் பாதை கடந்த 8 ஆண்டுகளில் முழுவதுமாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. இத்தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.