புதுடெல்லி: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2019-ம் ஆண்டில் சர்வதேச அளவில் நீரிழிவு நோயால் 40 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதிக நீரிழிவு நோயாளிகள் வாழும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. உலகின் ஒட்டுமொத்த நீரிழிவு நோயாளிகளில் 6-ல் ஒரு பங்கினர் இந்தியாவில் உள்ளனர்.
கரோனா தொற்றால் நீரிழிவு நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, இதய பாதிப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. எனவே நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
இந்தியாவில் நீரிழிவு முதல் வகையால் (டைப் 1) பாதிக்கப்படும் சிறார், இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்வதை நிறுத்துவதால் ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கிறது. பெரும்பாலும் மரபணு ரீதியாக பாதிப்பு ஏற்படுகிறது. 4 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
நீரிழிவு முதல் வகையால் பாதிக்கப்பட்டோர், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை சீராக வைத்திருக்க வேண்டும். ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் எடையை சீராக வைத்திருக்க வேண்டும். சிறாருக்கு போதுமான ஊட்டச்சத்து உணவுகளை வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்களது வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்கும். உப்பை குறைவாக பயன்படுத்த வேண்டும். இனிப்புகளை தவிர்க்க வேண்டும்.
நாள்தோறும் 3 வேளை உணவு உட்கொள்ளும் பழக்கத்தை மாற்றி, 6-7 முறை சாப்பிட வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்வதுடன் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை பரிசோதிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்படி இன்சுலின் மருந்தை செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.