சென்னை: வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையங்கள், அதில் பணியாற்றும் மருத்துவர்களின் வீடுகள் உட்பட 25 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை வடபழனியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆர்த்தி ஸ்கேன் மையம், தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்குவங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் சுமார் 45 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் அண்மையில் பல இடங்களில் புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளது.
அனைத்து வகையான பரிசோதனைகளையும் மேற்கொள்ளும் இந்த நிறுவனத்தின் ஸ்கேன் மையங்களில் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும். இதனால் பலகோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், வெளிநாடுகளில் இருந்து பல கோடி மதிப்பிலான அதிநவீன இயந்திரங்களை கொள்முதல் செய்துள்ளதாகவும், முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில், இந்நிறுவனம் கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், நிறுவனத்தின் செயல்பாடுகளையும் வருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை வடபழனி மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஸ்கேன் மையங்கள், அண்ணா நகரில் உள்ள நிறுவன நிர்வாகிகளின் வீடுகள், அந்த நிறுவனத்தில் பணியாற்றும் மருத்துவர்களின் வீடுகள், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ளஆர்த்தி மருத்துவமனை உரிமையாளரின் வீடு, மருத்துவமனை, திருமண மண்டபம், தூத்துக்குடி, நெல்லையில் உள்ள ஸ்கேன் மையங்கள் உள்ளிட்ட 25 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனை நடப்பதையொட்டி ஸ்கேன் மையங்களுக்கு நேற்று காலை உடல் பரிசோதனைக்கு வந்தவர்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை பகுதிகளைச் சேர்ந்த சுமார் 200 வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த நிறுவனத்துக்கு சொந்தமாக, வெளி மாநிலங்களில் உள்ள வீடு, அலுவலகங்கள் மற்றும் மையங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘வரி ஏய்ப்பு செய்வதாக வந்த தகவல்களின் அடிப்படையில், ஆர்த்தி ஸ்கேன் மையங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த காலங்களில் இந்த நிறுவனம் செய்த முதலீடுகள், மருத்துவக் கருவிகள் கொள்முதல், வருவாய் மற்றும் செலவுகள் உள்ளிட்ட பதிவேடுகளை ஆய்வு செய்துள்ளோம். சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், மேலும் 2 நாட்களுக்கு சோதனை மேற்கொள்வோம். கணக்கில் காட்டப்படாத ரொக்கம், ஆவணங்களின் மதிப்பு குறித்து தற்போது கூற இயலாது. சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னரே, பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள், சொத்து மற்றும் ரொக்கம் குறித்து தெரிவிக்கப்படும்” என்றனர்.