அண்ணாமலை புகார்; பொய்களை அடுக்கும் அமைச்சர்கள்: பால் முகவர்கள் சங்கம் கண்டனம்

Tamilnadu Milk association condemns Ministers for false information about health mix: கர்ப்பிணி பெண்களுக்கு ஹெல்த் மிக்ஸ் வழங்குவதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்கள் பொய்யான தகவல்களைத் தந்து உண்மையை மறைத்துள்ளதாக, அமைச்சர்களுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கமளித்தனர்.

இந்தநிலையில், ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கும் விவகாரத்தில் அமைச்சர்கள் பொய்யான தகவல்களை தந்துள்ளதாக, அமைச்சர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் கடந்த மூன்று, நான்கு நாட்களாக பரப்பாக பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வரும் விசயம் கருவுற்ற தாய்மார்களுக்கு அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் பரிசுப் பெட்டக தொகுப்பில் “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” வழங்காமல் தனியார் தயாரிப்பான “Pro PL ஹெல்த் மிக்ஸ்” வழங்க ஒப்பந்தம் போடப்பட்டதால் அரசுக்கு 77 கோடி ரூபாய் வரை இழப்பை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதாரத்துறை மீது பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டு தான்.

இந்த குற்றச்சாட்டு எழுந்த போது ஆவினில் ஹெல்த் மிக்ஸ் என்கிற பொருளே கிடையாதே பின்னர் எப்படி இது சாத்தியமானது? என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் களத்தில் இறங்கினோம். ஆவினில் பல்வேறு தரப்பில் இருந்தும் தகவல் சேகரித்ததில் ஆவினில் அப்படி ஒரு ஹெல்த் மிக்ஸ் என்கிற பொருள் உற்பத்தியே இல்லை என்பதும், இல்லாத பொருளை முன் வைத்து கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற திட்டக்கமிஷன் ஆலோசனை கூட்டத்தில் ஆவின் நிறுவனத்தின் தரப்பில் கலந்து கொண்ட ஆவின் பொது மேலாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு வழங்கும் “Pro PL ஊட்டச்சத்து” பொருளுக்கு மாற்றாக “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” வழங்கிட பரிந்துரை செய்திருக்கும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

ஏற்கனவே கடந்த அ.தி.மு.க ஆட்சி தொடங்கி தற்போதைய தி.மு.க ஆட்சி வரை ஆவினில் ஊழல், முறைகேடுகள் புரையோடிப் போயிருக்கும் நிலையில் “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” குறித்து பொது மேலாளர் ராஜேந்திரன் அவர்கள் எதன் அடிப்படையில் சுகாதாரத்துறைக்கு பரிந்துரை செய்தார்? என்கிற சந்தேகம் வலுத்ததாலும், ஒருவேளை கடந்த காலங்களில் ஆவினில் நடைபெற்ற பல்வேறு முறைகேடுகள் போல தற்போது “டெய்ரி ஒயிட்னரை ஆவின் ஹெல்த் மிக்ஸ் என்று கூறி அதை வைத்து மிகப்பெரிய அளவில் முறைகேடுகள்” செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா? என தெரியாததாலும் ஆவினில் உற்பத்தியே செய்யப்படாத ஒரு பொருளை அரசு வழங்கும் நலத்திட்ட உதவி பரிசுப் பொருள் பெட்டகத்திற்கு பரிந்துரை செய்ய துறைசார்ந்த அமைச்சர், அரசு செயலாளர், கமிஷனர், நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு தெரியாமல் ஒரு பொது மேலாளரால் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவெடுத்திருக்க முடியாது என்பதாலும் அவரை அவ்வாறு இயக்கியது யார்?, அவர் பின்னால் இருந்து முறைகேடுகள் செய்ய திட்டமிட்டது யார்? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்த தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் தான் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன், பால்வளத்துறை அமைச்சர் திரு. சா.மு.நாசர் மற்றும் பால்வளத்துறை செயலாளர் திரு. ஜவஹர், ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. சுப்பையன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது பாஜக தலைவர் திரு. அண்ணாமலை அவர்களுக்கு பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டு ஒரு பொய்யை மறைக்க அடுக்கடுக்கான பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டுள்ளது அப்பட்டமாக பல்லிளித்துள்ளது.

ஏனெனில் தமிழக சட்டமன்றத்தில் நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் 13ம் தேதி பால் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது, அப்போது பால்வளத்துறை சார்பில் அமைச்சர் நாசர் அவர்கள் வெளியிட்ட 36 அறிவிப்புகளில் 26வது அறிவிப்பில் தான் “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” உள்ளிட்ட 10 வகையான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் அறிமுகம் செய்ய இருப்பது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடப்பாண்டில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட பால்வளத்துறை தீர்மானத்தில், “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” தொடர்பான தீர்மானம் 20வது அறிவிப்பாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதாக தவறான தகவலை பத்திரிகையாளர்கள் மத்தியில் பால்வளத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளதோடு, “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” என்பது சிறுதானியங்கள், தானிய பயிர்கள், பால் பவுடர் சேர்த்து பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட உள்ளதாகவும், இது அனைத்து வயதினருக்கும் சத்துமாவு போன்ற கலைவையாகும் எனவும், “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு வழங்கும் பரிசுத் தொகுப்பில் வழங்கப்படும் ஊட்டச்சத்து பொருளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது எனவும் சட்டமன்றத்தில் தாக்கல் செய்த தீர்மானத்திலேயே அது இடம்பெற்றுள்ளதாக இல்லாத ஒரு தகவலையும் சேர்த்து தெரிவித்துள்ளார். அவர் பேசிய தவறான தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களும் வழிமொழிந்து இவ்விவகாரத்தில் தங்கள் மீதான நம்பகத்தன்மையை இழந்து விட்டனர்.

மேலும் சட்டமன்றத்தில் பால்வளத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 36 அறிவிப்புகள் அடங்கிய 37 பக்க கையேட்டிலோ அல்லது 154 பக்கம் கொண்ட பால்வளத்துறையின் கொள்கை விளக்க குறிப்பேட்டிலோ எந்த இடத்திலும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சொன்ன தகவல் இடம்பெறவில்லை.

அதுமட்டுமன்றி “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” தயாரிப்பு தொடர்பாக பால்வளத்துறை சார்பில் சட்டமன்றத்தில் தீர்மானம் வெளியிடப்பட்டது ஏப்ரல்-13ம் தேதி தான் எனும் போது அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் தொகுப்பு தொடர்பாக அதற்கு ஒரு மாதத்திற்கு முன் (மார்ச்) திட்டக்கமிஷன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ஆவின் பொதுமேலாளர் “ஆவின் ஹெல்த் மிக்ஸ்” குறித்து எப்படி எடுத்துரைத்தார்?, என்பதும், உற்பத்தியே செய்யப்படாத பொருளை வைத்து திட்டக்கமிஷன் கூட்டத்தில் விவாதம் நடத்தி அதனை அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் தொகுப்பில் இணைக்க ஒப்புதல் அளித்து 8 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு பட்டியலில் Pro PL ஹெல்த் மிக்ஸை நீக்கி விட்டு, ஆவின் ஹெல்த் மிக்ஸை சேர்த்தது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

இதையும் படியுங்கள்: சிதம்பரம் நடராஜர் கோயில் கணக்குகளை அறநிலையத்துறைக்கு வழங்க தீட்சிதர்கள் மறுப்பு

மேலும் “ஒரு பொய்யை மறைக்க நூறு பொய்கள்” சொன்ன கதை போல எதிர்க்கட்சித் தலைவர் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டை மறுக்க வேண்டும் என்பதற்காக அவசர, அவசரமாக பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி அதில் அவசரகதியில் எழுதப்பட்ட திரைக்கதை, வசனத்தை சுகாதாரத்துறை அமைச்சரும், பால்வளத்துறை அமைச்சரும் படித்துள்ளதோடு, அதற்கு பால்வளத்துறை செயலாளர் ஜவஹர் அவர்களும் சிறந்த முறையில் ஒத்துழைத்துள்ளார்.

எனவே ஆவின் ஹெல்த் மிக்ஸ் தொடர்பான அறிவிப்பு சட்டமன்றத்தில் வெளியிடுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆவின் டெய்ரி ஒயிட்னர் எனப்படும் பால் பவுடரை ஆவின் ஹெல்த் மிக்ஸ் எனக் கூறி திட்டக்கமிஷன் முன் பரிந்துரை செய்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொணர தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.