ஒரு நாளும் இல்லாத திருநாளாக… பிறந்தநாள் விழாவை அமர்க்களம் ஆக்கிய திருச்சி சிவா!

க.சண்முகவடிவேல்

Tiruchi Siva Tamil News: திமுகவில், கல்லூரி பருவத்தில் இணைந்தவர் சிவா. இவர் அவசர நிலை (எமர்ஜென்சி) பிரகடனப்படுத்தப்பட்ட, 1976-ம் ஆண்டு மிசா சட்டத்தில் கைதாகி சிறைக்கு சென்றவர். அதனால், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியின் நன்மதிப்பைப் பெற்றார். அதன் பின் கலைஞரால் சிவா, திருச்சி சிவாவாக அழைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் என அக்கட்சியில் தொடர்ச்சியாக பல்வேறு பதவிகளைப் பெற்றார்.

தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிக முக்கிய அடையாளமாக விளங்கியது, திமுக இளைஞரணி. அந்த திமுக இளைஞரணியை உருவாக்கிய ஐவரில் ஒருவர் திருச்சி சிவா. அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினின் நெஞ்சுக்கு நெருக்கமானவராக இருக்கிறார்.

கட்சியின் முக்கிய பொறுப்பிலும் தலைமையின் நெருக்கத்திற்கு உரியவராக இருந்து வரும் திருச்சி சிவா 5 முறை மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் இவருக்கு திருச்சி அரசியல் வெற்றிடமாகவே இருந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியை மையப்படுத்தியே இவரது அரசியல் பயணம் இருந்து வருகிறது.

இந்த சூழலில், தனது 69-வது பிறந்த நாள் விழா திருச்சியில் வழக்கத்துக்கு மாறாக பிரம்மாண்டமாகக் கொண்டாடப்பட்டது. இவரது வீடு அமைந்துள்ள கன்டோன்மென்ட் ஸ்டேட் பாங்க் ஆபிசர்ஸ் காலனிக்கு செல்லும் சாலையில் வாழை மரங்கள், தோரணங்கள் வரிசையாக கட்டப்பட்டிருந்தன. வாழ்த்து போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, மண்டலக் குழு தலைவர் மதிவாணன், கவுன்சிலர் ரமேஷ் உட்பட ஏராளமான திமுகவினர் இவரது வீட்டுக்குச் சென்று நேரில் வாழ்த்து தெரிவித்தனர். வீட்டுமுன் சாலையோரத்தில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு, அதற்கருகே ஆயிரக்கணக்கானோருக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது.

இதுதவிர திருச்சி இலக்கிய வட்ட நண்பர்கள் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு ஹோட்டலில் திருச்சி சிவாவின் பிறந்த நாள் மற்றும் விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இதுகுறித்து விழா ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன் தெரிவிக்கையில், “இந்த விழாவில் அரசியல் பாகுபாடின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிவா மீது கொண்ட பற்றால், இலக்கிய ஆர்வத்தால் பெரும்பான்மையான தமிழ் ஆர்வலர்கள் உள்பட திரளானோர் கலந்துக்கிட்டாங்க.

திருச்சி சிவாவின் பிறந்த நாள் விழா இலக்கிய விழாவாகக் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்பட்டு வருகின்றது. கொரோனா தடை கால கட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக சிவாவின் பிறந்தநாளை கொண்டாட முடியாமல் போனது. இப்போது கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதால் இந்தாண்டு எல்லோரும் சந்திக்கனும்ங்கறதால மீண்டும் அவரோடு பிறந்தநாள இலக்கிய விழாவா கொண்டாடுறோம்ங்க. ஒவ்வொரு விழாவிலும் இலக்கிய ஆர்வம் நிறைந்த, தமிழ் ஆர்வம் கொண்ட தொண்டு செய்த ஒருவருக்கு விருது வழங்குவது வழக்கம்.

சிவாவுக்குன்னு எந்த ஒரு அணியும் இல்ல, சிவா திமுகவின் தலைமைக்கு கட்டுப்பட்ட கலைஞரின் விசுவாசமான தொண்டர் அவ்வளவுதான். திமுகவின் அடுத்தடுத்த முக்கிய தலைவர்களில் திருச்சி சிவாவும் ஒருவர் அவ்வளவுதான். அதனாலதான் அவரு பிறந்தநாள இலக்கிய விழாவா கொண்டாடுறோம்.

அதன்படிதான், இந்தாண்டு கவிஞர் முத்துலிங்கத்திற்கு “இலக்கிய வேள் 2022” என்ற விருது வழங்கங்கப்பட்டது. இந்த இலக்கிய விழாவில் கவிஞர் அறிவுமதி, கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் இளம்பிறை, திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி, நடிகர் போஸ் வெங்கட் எல்லாம் கலந்துகிட்டு சிவாவுக்கு வாழ்த்துரை வழங்கினாங்க.

திருச்சி சிவா திமுக தலைவர்களில் ஒருவர் அவ்வளவுதாங்க, அவருக்கென எந்த அணியையும் அவர் எப்போதுமே ஏற்படுத்திக்கமாட்டாருங்க என்றார் அவரது தீவிர இலக்கிய நண்பரும் திருச்சி இலக்கிய வட்ட நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான சிவகுருநாதன்.

அதேநேரம் சிவா பிறந்தநாளுக்கு அவரது வீட்டிற்கு வந்த ஆதரவாளர்கள், விசுவாசிகள் இந்த திடீர் மாற்றம் குறித்து கூறும்போது; ‘‘இந்தாண்டு வழக்கத்தைவிட ஏற்பாடுகள் பிரம்மாண்டமாகவும், பங்கேற்றவர்கள் அதிகளவிலும் இருந்ததற்கு திருச்சி சிவாவின் அரசியல் நடவடிக்கைகளில் சமீபகாலமாக ஏற்பட்ட மாற்றமும் முக்கிய காரணம். என்னதான் இவர் நாடறிந்த அரசியல்வாதியாக இருந்த போதிலும், அவர் ஜனாதிபதி, பிரதமரிடம் சர்வ சாதாரணமாக பேசினாலும், உள்ளூரில் உள்ள எங்களை போன்ற தொண்டர்களுக்கு எவ்வித உதவியும் செய்யமுடியாத நிலையில் தான் இருந்தார்.

அவர் கைகாட்டும் நபர்கள், திருச்சி திமுகவில் ஒரு வட்டச் செயலாளராகவோ, வார்டு கவுன்சிலராகவோ எந்த ஒரு பதவியையும் பெறக் கூட முடியாத நிலைதான் இன்று வரை உள்ளது. மாநகராட்சி தேர்தலின்போது, இவர் பரிந்துரைத்த ஒருவருக்கு கவுன்சிலர் சீட் வழங்க தலைமை அறிவுறுத்திய பிறகும்கூட, இங்குள்ள நிர்வாகிகள் மறுத்து விட்டனர். மேலும், அவரது சொந்த மகனே பாஜகவில் சேர்ந்து அவருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு திருச்சி சிவாவின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. உள்ளூரிலுள்ள கட்சியினரின் குடும்ப நிகழ்ச்சிகள், இலக்கிய கூட்டங்கள், ரோட்டரி சங்கக் கூட்டங்கள் என பல நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்கிறார்.

திருச்சியிலுள்ள கட்சி நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்று சந்திக்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கும்போது இனி அவர், உள்ளூர் அரசியலிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதை உணர முடிகிறது’’ என்றனர்.

திருச்சியில் திமுகவினர் ஏற்கெனவே அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி என 2 தரப்பாக இருக்கும் நிலையில், மகன் சூர்யா பாஜகவில் இணைந்துள்ள சூழலில் திருச்சி சிவாவின் உள்ளூர் அரசியல் நடவடிக்கைகளை உளவுத்துறையும் உன்னிப்பாக கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.