மைசூரு : ”ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிப்பதே முக்கிய நோக்கமாகும். இதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம்,” என, ம.ஜ.த.,வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி, பகிரங்க அழைப்பு விடுத்தார்.கர்நாடக சட்டசபையிலிருந்து, ராஜ்யசபாவின் நான்கு எம்.பி., பதவிகளுக்கு, வரும் 10ல் தேர்தல் நடக்கிறது. எம்.எல்.ஏ.,க்கள் பலம் அடிப்படையில், பா.ஜ.,வுக்கு இரண்டு, காங்கிரசுக்கு ஒரு இடம் கிடைக்கும்.நான்காவது பதவிக்கு, எந்த கட்சிக்கும் முழு பலம் இல்லை என்றாலும், மூன்று கட்சிகளுமே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
இதற்கிடையில் குதிரை பேரம் மூலம், ‘கிராஸ் ஓட்டிங்’ நடத்த இரண்டு தேசிய கட்சிகளுமே திட்டமிட்டுள்ளன.சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர், அரசியல் விரோதிகள். ம.ஜ.த., வேட்பாளரை தோற்கடிப்பதற்காகவே காங்கிரஸ் தன் வேட்பாளரை களமிறக்கியது.ஆனால், தற்போது ராஜ்யசபா எம்.பி., தேர்தலுக்கு, குமாரசாமி புது கணக்கு போட்டு, கூட்டணி பேச்சு நடத்த காங்கிரசுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:தேர்தல் களத்தில் இருந்து ம.ஜ.த., வேட்பாளர் விலகும் பேச்சுக்கே இடமில்லை. எங்களிடம் 32 ஓட்டுகள் உள்ளன. காங்கிரசிடம் அதற்கும் குறைவாகவே உள்ளன.
அந்த வகையில் பார்க்கும் போது, ம.ஜ.த.,வின் குபேந்திர ரெட்டிக்கு வெற்றி வாய்ப்புள்ளது.தேவை எனில் எங்களிடம் உள்ள இரண்டாம் முன்னுரிமை வாக்குகளை, காங்கிரஸ் வேட்பாளருக்கு வழங்குகிறோம். காங்கிரசிடம் உள்ள இரண்டாம் முன்னுரிமை வாக்குகளை எங்கள் வேட்பாளருக்கு வழங்கட்டும்.ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிப்பதே முக்கிய நோக்கமாகும். இதற்காக காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம்.நாட்டில் மதசார்பின்மையை தக்க வைக்க வேண்டுமெனில், ம.ஜ.த.,வுடன் கை கோர்க்கவும். அடுத்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ்க்கு 70 – 80 தொகுதிகள் கிடைக்கும். பா.ஜ.,வை அதிகாரத்தில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்ற மனது இருந்தால், ராஜ்யசபா தேர்தலில் ஒத்துழைப்பு தாருங்கள்.கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சிக்கு வருவதற்கு சித்தராமையா தான் காரணம். தான், எதிர்க்கட்சி தலைவராக வலம் வருவதற்கு, கூட்டணி ஆட்சியை கவிழ்த்தார். அவரை தவிர, மற்ற தலைவர்கள் கூட்டணிக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement