யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் வழங்கி இன்று தீர்ப்பத்துள்ளது சென்னை பூந்தமல்லி நீதிமன்றம்.
சென்னை ஆவடியை அடுத்த மிட்டனமல்லி பகுதியை சேர்ந்தவர் யூடியூபர் கார்த்திக் கோபிநாத். இவர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலொன்றை, புனரமைப்பதாக கூறி பல லட்சம் வசூல் செய்ததாக இந்து அற நிலையத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டதில், அவர் பணம் பெற்றிருந்தது காவல்துறைக்கு தெரியவந்துள்ளது. அதன் ஆதாரங்கள் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கடந்த 30ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தொடர்புடைய செய்தி: உறுதியான பண மோசடி: யூ-ட்யூபர் கார்த்திக் கோபிநாத்தின் வங்கி கணக்கை முடக்க காவல்துறை முடிவு
இந்நிலையில் அவரை ஜாமினில் விடுவிக்க கோரி அவரது வக்கீல்கள் சார்பில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். இன்று அந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின், யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் கொடுப்பதாக உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் அது நிபந்தனை ஜாமீனா அல்லது நிபந்தனை அற்ற ஜாமீனா என்பது இன்னும் முழுமையாக தெரிவிக்கப்படவில்லை. இன்றைக்குள் அது தெரியவரும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த வாரம் கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு அளித்திருந்த காரணத்தால், அவருடைய முந்தைய ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அவர் இரண்டாவதாக ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM