கமல்ஹாசன் `விக்ரம்’ படத்தின் வெற்றியால் ஏக சந்தோஷத்தில் இருக்கிறார். படம் வெளிவந்து ஆறு நாள்கள் ஆகிவிட்டன. இன்றும் மக்களிடையே உற்சாகம் குறையாத வரவேற்பு கிடைத்து கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாகவும் நல்ல கலெக்ஷன் என்கிறார்கள் திரை வட்டாரத்தினர்.
படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ எனத் தன்னுடைய சந்தோஷத்தைப் பரிசுப்பொருள்களாக பகிர்ந்து அளித்து வருகிறார்.
படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு ரூ.75 லட்சம் மதிப்புள்ள ‘Lexus ES300h’ கார், 13 உதவி இயக்குநர்களுக்கு ‘Apache RTR 160’ பைக்குகள் என சர்ப்ரைஸ் கொடுத்தவர், படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்திருக்கிறார். படத்தில் சூர்யாவின் கேரக்டர் பெயரும் ‘ரோலக்ஸ்’தான் (என்ன பொருத்தம்!)
இந்த வாட்ச்சின் விலை எவ்வளவு தெரியுமா?
ரோலக்ஸ் DAY-DATE ஓயஸ்டர் 36 எம்எம் மாடலைச் சேர்ந்த வாட்ச்சைத்தான் கமல் சூர்யாவுக்குப் பரிசளித்திருக்கிறார் என்கிறார்கள். இதன் விலை ரூ.28,24,000/- என்று தெரிகிறது. சிலர் அது ரோலக்ஸ் DAY-DATE 40 என்ற மாடல் என்கிறார்கள். இதன் விலை ரூ.46,60,732/- வரை செல்கிறது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ‘ரோலக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் வாட்ச்சுகள் உலகிலேயே காஸ்ட்லியானவை. இதன் சிறு சிறு பாகங்கள் நுட்பமாக வாட்ச் உருவாக்கும் கலைஞர்களால் கைகளாலேயே செய்யப்படுகின்றன. அதனாலேயே சேதாரம் அதிகம். 904L ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வகை மெட்டீரியல்கள் இதன் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மெட்டீரியல் கடினமானது, எளிதில் அழியாதது. இந்த வகை மெட்டீரியலை வேறு எந்த வாட்ச்சுகளிலும் காண முடியாது. இதன் டிசைனிலும் உயர்தரம் காக்கப்படும். இன்னும் ஒரு 100 வருடத்திற்குப் பிறகு அந்த வாட்ச்சைப் பார்த்தாலும் அப்படியே இருக்குமாம். தரமும் கலைநயமும்தான் இதன் விலையை நிர்ணயிக்கின்றன.
சூர்யாவுக்கு கமல் அளித்திருக்கிற வாட்ச் மாடல் முதன்முறையாக 1956-ல் லாஞ்ச் ஆனது. முதல் வாட்டர் ப்ரூப் வாட்ச் இதுதான். இதில் பொருத்தப்பட்டிருக்கும் செல்ப் வைண்டிங் க்ரோனோமீட்டர் கடுமையான அழுத்தத்திலும் காலநிலையிலும் துல்லியமாக நேரத்தைக் காட்டும். இதன் மேற்பகுதியில் நீங்கள் கிழமையையும் வலப்பக்கம் 3 மணிக்கான இடத்தில் தேதியையும் அறிந்து கொள்ளலாம். இந்த வாட்ச்சில் 18 கேரட் தங்கமும், நேரத்தைக் குறிக்கும் கோடுகளில் Baguette Cut வைரங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
தங்கம் சார்!