Team India: ஹர்திக், தினேஷ் கார்த்திக்கின் வருகை; T20 உலகக்கோப்பைக்கான டிராவிட்டின் பிளான்!

சுமார் இரண்டு மாத காலத்திற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் பக்கம் மீண்டும் கவனத்தைத் திரும்பியிருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். எதிர்பாராத அதிரடிகள், ஏராளமான ஆச்சரியங்கள் என ஓர் அசத்தலான ஐ.பி.எல் நிறைவடைய, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா முதலிய சீனியர்கள் தொடங்கி உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் என பலரும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளனர்.

Bishnoi – Umran Malik – Arshdeep

தென்னாப்பிரிக்க அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளைய தினம் தொடங்கவுள்ள நிலையில் சீனியர்கள் இல்லாத இளம் படை இதற்கு ஆயத்தமாகிவருகிறது. ஒவ்வொரு பொசிஷனிற்கும் 2-3 வீரர்கள் என தற்போதைய இந்திய அணியில் எக்கச்சக்க ஆப்ஷன்கள் உள்ளன. டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் இனிவரும் ஒவ்வொரு போட்டியும் அதற்கான ஒத்திகையாகவே பார்க்கப்படும். முந்தைய உலகக்கோப்பையை போல் அல்லாமல் ஆஸ்திரேலிய மைதானங்களுக்கேற்ப சரியான காம்பினேஷனில் அணியைத் தேர்வு செய்வதே தற்போதைய அணியின் தலையாய கடமை. அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டும் இதை சமீபத்திய பேட்டியில் தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்த ஐ.பி.எல் தொடரின் மிக சிறந்த கம்-பேக்காக ஹர்திக் பாண்டியாவின் எழுச்சியை நிச்சயம் கூறிவிடலாம். தன் பழைய ஃபார்மை மீட்டெடுத்தது மட்டுமல்லாமல் ஓர் புதிய அணியை கோப்பை வெல்ல வழிநடத்தியது, தேசிய அணிக்கு திரும்பியிருப்பது இரண்டும் இந்திய அணிக்கு எக்கச்சக்க பாசிட்டிவிட்டியை அளிக்கும் என்பதில் எந்தவித சந்தேங்கமும் இல்லை. “ இந்த நேரத்தில் ஹர்திக் மீண்டும் பந்துவீசத் தொடங்கியிருப்பது அணிக்கு கூடுதல் பலமளிக்கும். ஓர் கிரிக்கெட் வீரராக அவரின் முழுமையான பங்களிப்பை அவரிடமிருந்துப் பெறுவதை உறுதிசெய்வோம் ” என்று கூறியுள்ளார் டிராவிட். மேலும் “ கிளப் கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியின் தேவைக்கேற்ப வீரர்களுக்குக் கொடுக்கப்படும் பொறுப்பு மாறுபடும். ஆனால் இந்திய அணியின் காம்பினேஷன்படி அவ்வீரர்களின் ரோல் சற்று மாறுபடலாம்” என்று இந்திய அணியில் பாண்டியாவிற்கு இருக்கப்போகும் பொறுப்புகள் பற்றியும் பேசியுள்ளார். அவரைப் போல தினேஷ் கார்த்திக்கின் ரோலையும் தெளிவுபடுத்தியுள்ளார் டிராவிட் “ இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் தினேஷ் மிகச் சிறந்த ஆட்டத்தை கடந்த 2-3 வருடங்களாகவே தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறார். அதேபோல இந்திய அணிக்கும் பங்களிப்பார் என்று நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.

Dinesh Karthick

மிக பலமான இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு கூட்டணியின் புதுவரவு உம்ரான் மாலிக் மற்றும் அர்ஷ்தீப் சிங். ஆனால் அவர்கள் இருவரும் இத்தொடரின் ஆடும் லெவனில் இடம்பெறுவது சந்தேகமே.

“ முதலில் அவர்கள் இருவரும் அணிக்குள் செட்டில் ஆகவேண்டும். தற்போதைய அணியில் ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான் முதலிய வீரர்கள் ஏற்கனவே உள்ளதால் அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே” என்றார்.

இது ஒருபுறம் இருக்க அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோரின் தொடர் ஃபார்ம் அவுட் அணிக்கு வேதனை அளிக்கக்கூடிய ஒன்று. அதேபோல ராகுலின் ஸ்ட்ரைக் ரேட்டும் பலரால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. “ டி20 ஃபார்மர்ட்டை பொறுத்தவரையில் வீரர்கள் நேர்மறையாக இருப்பது மிகவும் அவசியம். அந்த மூவரின் திறன் குறித்தும் எங்களுக்கு நன்றாகத் தெரியும். இப்போதைக்கு ஓவ்வொரு வீரரின் ரோலையும் முடிந்தளவுக்கு தெளிவுபடுத்தி ஆட்டத்தின் எந்தத் தருணத்திலும் அவர்களை முழு நம்பிக்கையோடு ஆடவைப்பதே எங்களின் முயற்சியாக இருக்கும்” இவ்வாறு கூறினார் டிராவிட்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.