Tamil news today live: அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமை இல்லை- எடப்பாடி உறுதி

பெட்ரோல்- டீசெல் விலை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63-க்கும். டீசல் லிட்டருக்கு ரூ. 94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் 2வது நாளாக சோதனை

நாடு முழுவதிலும் உள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் 2 வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 25 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஆர்த்தி ஸ்கேன் நிறுவனத்திற்கு 65 கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடதக்கது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2-வது நாளாக ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2 வது நாளாக அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்ய மறுப்பு தெரிவித்து நேற்று தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Live Updates
20:11 (IST) 8 Jun 2022
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன் ஆளுநருக்கு கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாந்தன், தன்னை விடுதலை செய்யக்கோரி சிறைத்துறை மூலம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேல் வேலூர் மத்திய சிறையில் உள்ள சாந்தன் சமீபத்தில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட நிலையில் தன்னையும் விடுதலை கோரி சாந்தன் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

18:54 (IST) 8 Jun 2022
இலங்கை அணிக்கு எதிரான டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு

இலங்கை அணிக்கு எதிரான டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான இந்திய மகளிர் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ரெகுலர் கேப்டன் மிதாலி ராஜ் ஓய்வை அறிவித்த நிலையில் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டனாக ஸ்மிரிதி மந்தனா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

18:25 (IST) 8 Jun 2022
140 முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ₨81.37 கோடி மதிப்பிலான 140 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ₨143 கோடி மதிப்பிலான 1,397 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், ₨379.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார்

18:21 (IST) 8 Jun 2022
அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமை இல்லை- எடப்பாடி உறுதி

அதிமுகவுக்கு ஒற்றை தலைமை என்று யார் சொன்னது என்று தெரியவில்லை. கட்சியில் இல்லாத சசிகலா மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புவது ஏன்? அதிமுகவை தவிர்த்து எல்லாமே எதிர்கட்சிதான். அதில் அதிமுக பிரதான எதிர்கட்சி என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

18:18 (IST) 8 Jun 2022
ஏர்டெல் செல்போன் சேவை பாதிப்பு

சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏர்டெல் செல்போன் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த அரைமணி நேரமாக எஸ்.எம்.எஸ், இணையம் உள்ளிட்ட எந்த சேவையும் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.

18:17 (IST) 8 Jun 2022
புதுக்கோட்டை திமுக கூட்டணி அரசின் கோட்டையாக திகழ்கிறது – முதல்வர் ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டத்தில் திட்டப்பணிகள் தொடக்க விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் புதுக்கோட்டை திமுக கூட்டணி அரசின் கோட்டையாக திகழ்கிறது. புதுக்கோட்டையை தனி மாவட்டமாக மாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று கூறியுள்ளார்.

16:57 (IST) 8 Jun 2022
விழுப்புரம் அருகே பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மட்டப்பாறை பகுதியில் பேருந்து மோதி வேணுகோபால்(34) என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து பொதுமக்கள் அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

16:20 (IST) 8 Jun 2022
அனைத்து விதமான கடைகளும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி

தமிழ்நாட்டில் உள்ள எல்லாவிதமான கடைகளும் 24 மணி நேரமும் திறந்து கொள்வதற்கான அனுமதி வழங்கி அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 10 நபர்களுக்கு மேல் பணிபுரியக்கூடிய கடைகளை முழு நேரமும் திறக்கலாம்.

கடந்த 2019ல் கொண்டு வரப்பட்ட நடைமுறை, ஜூன் 5 முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

15:58 (IST) 8 Jun 2022
கைதி விக்னேஷ் கொலை வழக்கு – காவல் ஆய்வாளர் செல்வராஜ் இடமாற்றம்

சென்னையைச் சேர்ந்த விசாரணைக் கைதி விக்னேஷ் கொலை வழக்கில் சிக்கிய, காவல் ஆய்வாளர் செல்வராஜ் மேற்கு மண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

15:01 (IST) 8 Jun 2022
ஆணவக் கொலை வழக்கு – மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைப்பு!

சாதி மறுப்பு திருமணம் செய்ததால் விருத்தாச்சலத்தை சேர்ந்த கண்ணகி – முருகேசன் தம்பதியர் 2003ல் விஷம் கொடுத்து ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு கடலூர் நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் கண்ணகியின் தந்தை உள்ளிட்ட உறவினர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம், ரங்கசாமி மற்றும் சின்னதுரை ஆகியோரை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

14:57 (IST) 8 Jun 2022
ஓய்வு பெறுகிறார் மிதாலி ராஜ்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அணியின் கேப்டனாக பல ஆண்டுகளாக வழிநடத்தியது பெருமையாக உள்ளது. இந்திய அணிக்காக விளையாடியதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். என் விளையாட்டை ஊக்குவித்து, ஆதரவு தெரிவித்த எனது ரசிகர்களுக்கு நன்றி. வீராங்கனையாக எனது பணி நிறைவடைந்தாலும், மகளிர் கிரிக்கெட்டுக்காக எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்” என்று மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

14:54 (IST) 8 Jun 2022
நடிகர் சூர்யாவுக்கு “ரோலக்ஸ்” வாட்ச் பரிசளித்த உலகநாயகன் கமல்!

நடிகர் சூர்யா, உலகநாயகன் கமல்ஹசன் நடிப்பில் வெளிவந்த “விக்ரம்” படத்தில் “ரோலக்ஸ்” எனும் கதாபாத்திரத்தில் திரையில் தோன்றி இருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப்படத்தின் தயாராரிப்பாளரும், நடிகருமான கமல் சூர்யாவுக்கு “ரோலக்ஸ்” வாட்ச்சை பரிசளித்தார்.

14:24 (IST) 8 Jun 2022
பனை, முருங்கை மரங்களை நட கோரிய வழக்கு!

100 நாட்கள் வேலை திட்டத்தில் பனை, முருங்கை மரங்களை நட தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “எந்த மரம் நடுவது என்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளது. மேலும், மனு வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தது.

14:19 (IST) 8 Jun 2022
செஸ் கூட்டமைப்பின் செயலாளராக பரத் சிங் சௌகான்!

அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளராக பரத் சிங் சௌகான் தேர்வு செய்யப்பட்டதை டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது அவரே அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளராக ஆகஸ்ட் 15 வரை செயல்படலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

14:17 (IST) 8 Jun 2022
தமிழ்நாடு, புதுவையில் 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13:56 (IST) 8 Jun 2022
ரத்த காட்சிகளுக்கு எச்சரிக்கை – வழக்கு வாபஸ்!

திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளின் போது ஆயுதங்கள் மற்றும் ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற உத்தரவிட கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திரைப்படக் காட்சிகளை பார்த்துதான் பள்ளி மாணவர்கள் புத்தக பைகளில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் வருவதாக கூறுவதற்கு ஆதாரம் என்ன? என்றும் கேள்வியெழுப்பிய நீதிமன்றம், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக நீதிமன்றம் எச்சரித்த நிலையில் வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

13:54 (IST) 8 Jun 2022
அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஜூலை 25ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

13:53 (IST) 8 Jun 2022
மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: சிவசங்கர் பாபா மீண்டும் ஆஜராக உத்தரவு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சிவசங்கர் பாபா மீது பதிவான வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபா இன்று ஆஜரான நிலையில், அவர் ஜூலை 15ம் தேதி மீண்டும் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

12:50 (IST) 8 Jun 2022
யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்கிய பூந்தமல்லி நீதிமன்றம்

பாஜகவை சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமின் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு. சிறுவாச்சூரில் உள்ள அம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக முறைகேடாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரில் கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டார்.

12:47 (IST) 8 Jun 2022
பொறியியல் செமஸ்டர் தேர்வு ஜூன் 28ல் தொடக்கம்

பி.இ, பி.டெக் படிப்புகளுக்கு வரும் ஜூன் 28 ஆம் தேதி செமஸ்டர் தேர்வு தொடங்கவுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 18 முதல் செய்முறை தேர்வுகள் நடைபெறும். முதுநிலை பொறியியல் படிப்புக்கான செய்முறை தேர்வு செப்டம்பர் 5,6 இல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:13 (IST) 8 Jun 2022
ரூ.119.68 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

சிவகங்கை காரையூரில் ஊரக உள்ளாட்சித் துறை, மருத்துவம், நீர்வளத் துறை சார்பில் ரூ119.68 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

12:04 (IST) 8 Jun 2022
கந்துவட்டி விவகாரம் – டிஜிபி முக்கிய உத்தரவு

கந்துவட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும். நிலுவையில் உள்ள வழக்குகளையும் உடனடியாக விசாரித்து, தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

11:40 (IST) 8 Jun 2022
தமிழ்நாடு அரசின் முடிவுக்கு தடையில்லை – உச்சநீதிமன்றம்

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் சார்பிலான இடையீட்டு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.

11:35 (IST) 8 Jun 2022
511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் – கல்வித்துறை அதிர்ச்சி தகவல்

கொரோனா காலகட்டங்களில் 511 பள்ளி மாணவிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளதாக கல்வித்துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல். படிப்பு பாதிக்காமல் இருக்க மாணவிகளை மீண்டும் பள்ளிகளுக்கு அழைத்து வந்த கல்வித்துறை.

11:11 (IST) 8 Jun 2022
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2வது நாளாக ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2வது நாளாக ஆய்வு நடத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். ஆய்வு செய்யும் அதிகாரிகள் குழுவுடன் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரும் வந்துள்ளதாக தகவல்!

10:49 (IST) 8 Jun 2022
ரெப்கோ வட்டி விகிதம் உயர்வு

ரெப்கோ வட்டி விகிதம் 50 புள்ளிகள் உயர்ந்து 4.90 %ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். உக்ரைனில் போர் நடந்து வருவதால் உலகம் முழுவதிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது என்றும் மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரொப்கோ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக விளக்கம் அளித்தார். இந்திய பொருளாதாரம் நிலையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

09:50 (IST) 8 Jun 2022
சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைபட்டியில் சமத்துவபுரத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். தமிழகத்தின் 235வது பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்து 100 பயனர்களுக்கு சாவி வழங்கினார்.

09:08 (IST) 8 Jun 2022
கொரோனா தொற்று; ஒரே நாளில் 7 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 3,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,31,85,049 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 26,976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,24,708 ஆக அதிகரித்துள்ளது

08:11 (IST) 8 Jun 2022
சமத்துவபுரத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கோட்டை வேங்கைபட்டியில் சமத்துவபுரத்தையும் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்.

08:11 (IST) 8 Jun 2022
பிரதமர் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவைக்கூட்டம் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் முக்கிய அரசு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.