தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டம்; ஆக.23-ல் கோட்டை நோக்கி பேரணி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்

சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கடந்த ஆட்சிக் காலத்தில் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தினோம். தற்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டை நிறைவு செய்துள்ள நிலையிலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 20 முதல் தொடர் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

ஜூன் 20-ம் தேதி ராமேஸ்வரம், கன்னியாகுமரி (களியக்காவிளை), வேதாரண்யம், புதுக்கோட்டை, கூடலூர், தர்மபுரி (ஒகேனக்கல்), திருவள்ளூர் ஆகிய 7 மையங்களிலிருந்து 20.6.2022 முதல் 24.06.2022 வரை 5 நாட்கள் ஊழியர் சந்திப்பு பிரச்சாரம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

எஸ்மா, டெஸ்மா சட்டத்தில், 1 லட்சத்து 76 ஆயிரம் பேரை பதவி நீக்கம் செய்த ஜூலை 2-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு, கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளது. மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஜூலை 26-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம்.

இதன்பின்னரும் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை என்றால் ஆகஸ்ட் 23-ல் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்கும் கோட்டை நோக்கி பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அப்போதும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் 2003-ல் நடைபெற்றது போல் வேலை நிறுத்தம், சாலை மறியல் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.