சர்ச்சை பேச்சு எதிரொலி | ஒரு வாரத்துக்குப் பின் சட்ட நடவடிக்கை – நூபுர் சர்மாமீது எப்ஐஆர் பதிவு

புதுடெல்லி: சர்ச்சை பேச்சுக்களை வெளிப்படுத்தியதால் பாஜகவில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட நூபுர் சர்மாமீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கியான்வாபி மசூதி சர்ச்சை தொடர்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா. அப்போது அவர், நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். தொடர்ந்து தொழிலதிபரும் பாஜக பிரமுகருமான நவீன் ஜிண்டால் ட்விட்டரில் சர்ச்சைகுரிய ட்வீட்டை பதிவிட்டார். பின்னர் அந்த கருத்தை நீக்கினார். இதனைக் கண்டித்து கான்பூரில் நடந்த போராட்டம் வன்முறையானது. இது தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கான்பூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

கடும் எதிர்ப்பு கிளம்ப இருவரும் பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். எனினும், நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர் பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வளைகுடா நாடுகள் பல, தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன. இதனால், இந்த விவகாரம், கடந்த மூன்று நாட்களாக இந்தியாவுக்கு உலக நாடுகளின் கண்டனங்களை பெற்றுத் தந்திருக்கிறது. வளைகுடா நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தலிபான்கள் கூட இந்தியாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர். அல் கொய்தா தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

விஷயம் பெரிதாக, கண்டனங்களை பெற்றுத்தர காரணமான சர்ச்சைப் பேச்சு பேசிய நூபுர் சர்மா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி காவல்துறையின் உளவுத்துறை இணைவு மற்றும் உத்திசார் செயல்பாட்டுப் பிரிவு போலீஸார், வெறுப்புச் செய்திகளைப் பரப்பியது, பல்வேறு குழுக்களைத் தூண்டிவிட்டு, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

அதேநேரம், இதே பிரிவுகளின் கீழ் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளராக அறியப்படுகிற சபா நக்வி, வலதுசாரி செயற்பாட்டாளர் பூஜா ஷகுன் பாண்டே, ஷதாப் சவுகான், மௌலானா முஃப்தி நதீம், அப்துர் ரஹ்மான், குல்சார் அன்சாரி, அனில் குமார் மீனா போன்ற சிலர் மீதும் இந்த விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி ஏஜென்சி நிறுவனம் செய்திவெளியிட்டுள்ளது. சர்ச்சைக்கு பேச்சு பேசிய ஒரு வாரத்துக்குப் பின் முதல் சட்ட நடவடிக்கை நூபுர் சர்மா மீது பாய்ந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.