உக்ரைனில் ரஷ்யப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு பிரித்தானிய வீரர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஐடன் அஸ்லின் மற்றும் ஷான் பின்னர் ஆகிய இருவரும் 20 ஆண்டுகள் வரையில் சிறைதண்டனையை அனுபவிக்கக் கூடும் என கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதம் உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட்டபோது கைது செய்யப்பட்டவர்கள், தற்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐடன் அஸ்லின் மற்றும் ஷான் பின்னர் ஆகிய இருவரும் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தீவிரவாத நடவடிக்கைக்ள் மேற்கொண்டதற்கான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, குறித்த இரு வீரர்களில் அஸ்லினுக்கு 15 முதல் 20 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனவும்,
அதிகாரத்தை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயன்றதாக குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் பின்னருக்கு அதிக ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிய வந்துள்ளது.
மரியுபோல் நகரில் ரஷ்ய துருப்புகளுக்கு எதிராக போரிட்டு வந்த நிலையில் வெடிப்பொருட்கள் மற்றும் உணவு இல்லாமல் சிக்கிய போது ரஷ்ய துருப்புகளால் அஸ்லின் கைதாகியுள்ளார்.
நாட்டிங்ஹாம்ஷையரைச் சேர்ந்த அஸ்லின், மைக்கோலைவ் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில் 2018ம் ஆண்டு உக்ரைனுக்கு குடிபெயர்ந்தார்.
ஷான் பின்னரும் மரியுபோல் நகரில் சுமார் 6 வாரங்கள் போரிட்டு வந்த நிலையில், ரஷ்ய துருப்புகளிடம் சிக்கியுள்ளார்.
போரிட தாம் விரும்பவில்லை எனவும், சொந்த நாட்டுக்கு திரும்பவே ஆசைப்படுவதாகவும் ரஷ்ய அதிகாரிகளிடம் ஷான் பின்னர் கூறியதாக தெரிய வந்துள்ளது.
பெட்ஃபோர்ட்ஷையரைச் சேர்ந்த ஷான் பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி லாரிசாவுடன் தங்கும் பொருட்டு மரியுபோல் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.