சென்னை: வறட்சி மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கித் தவிக்கும் சென்னையைக் காப்பாற்ற நீர் நிலைகளை முறையாகப் பராமரித்து, சிறப்பாக மேலாண்மை செய்வது அவசியம் என்று அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் மக்கள் தொகை 1981-ல் 40 லட்சமாக இருந்தது. தற்போது 1 கோடியே 15 லட்சமாக, ஏறக்குறைய 3 மடங்கு அதிகரித்துள்ளது. இது, 2035-ம்ஆண்டில் 1 கோடியே 50 லட்சமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஒருபுறம் மக்கள் தொகை அதிகரிக்கிறது. மறுபுறம் காலநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் மழையளவு குறைந்து வருகிறது.
நகர்மயமாதல், தொழில்மயமாதல், நீர்நிலைகளை முறையாகப் பராமரிக்காததன் காரணமாக 1974, 1982, 1992, 1996, 2003, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2019-ல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டதோடு, நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்தது. பள்ளிகள், அலுவலகங்கள், ஓட்டல்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் மூடப்பட்டன. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அரக்கோணம், ஈரோடு நகரங்களில் இருந்து காவிரி நீர் ரயிலில் எடுத்து வரப்பட்டது. பல இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்புடன் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் 1897-ல் 12.6 சதுர கி.மீட்டராக இருந்தது. இது, 2017-ல் 3.2 சதுர கி.மீட்டராக சுருங்கிவிட்டது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் நீர் ஆதாரங்களின் பரப்பளவு மிகவும் சுருங்கிவிட்டதாக அண்ணா பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
சென்னை மாநகரை நவீனமயமாக்குவதன் அடையாளமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிறுவனங்கள் 230 சதுர கி.மீட்டர் சதுப்பு நிலங்களை விழுங்கியுள்ளன. நீர் நிலைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், வெள்ள நீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டதால் நீர் நிலைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளின் தினசரி குடிநீர் தேவை 1981-ல் 1,321 மில்லியன் லிட்டராக இருந்தது. 2021-ம் ஆண்டில் 1,980 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1903, 1943, 1969, 1976, 1985, 1996, 1998, 2002, 2005, 2010, 2013, 2015, 2021 ஆகிய ஆண்டுகளில் இயல்பைவிட கூடுதல் மழையும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. அதுவும் 2015-ல் சென்னை மாநகர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இப்படி வறட்சியிலும், வெள்ளத்திலும் தத்தளிக்கும் சென்னை மாநகரை காப்பாற்ற சரியான திட்டமிடல் அவசியம் என்கிறது ஆய்வு.
இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வெள்ள காலத்தில் தண்ணீர் விரைவில் வடிவதற்கு வசதியாக கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி, மாம்பலம் கால்வாய் போன்றவற்றில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் பகுதிகளை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களை மறுகுடியமர்வு செய்வதுடன், அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
குடிநீர் தேவை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளைத் தூர்வாரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சோழவரம் ஏரி தூர்வாரப்பட்டதால் அதன் கொள்ளளவு 800 மில்லியன் கனஅடியில் இருந்து ஆயிரம் மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுப்படி நீர் நிலைகளில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதுடன், மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் இருப்பதற்காகவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மைக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் எதிர்கால தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிரமம் இருக்காது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
சென்னைக் குடிநீர் வாரியத்தில் தினமும் 1,300 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகிக்கும் திறன் உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தற்போது தினசரி ஆயிரம் மில்லியன் லிட்டருக்கு குறையாமல் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் 1,027 மில்லியன் லிட்டர் விநியோகிக்கப்பட்டது.
2011-ல் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புக்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. எதிர்கால குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட 3-வது கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் ரூ.1,259 கோடியிலும், 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட 4-வது கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் ரூ.6,078 கோடியிலும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வறட்சி, வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் சென்னையைக் காப்பாற்ற தண்ணீர் நுகர்வைக் குறைப்பது, தண்ணீர் இழப்பைக் கணிசமாகக் குறைப்பது, மிகப்பெரிய அளவில் மழைநீர் சேகரிப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல், நீர்நிலைகளை மறுசீரமைப்பு செய்தல், ஏரிகளைத் தூர்வாருதல், முறையான நீர் மேலாண்மை ஆகியவற்றைச் செய்வது அவசர அவசியமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.