பா.ஜ.கவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் கடந்த சில தினங்களாகவே உலக அளவில் பல்வேறு கண்டனங்களை இந்தியா சந்தித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏதாவது செய்யுமாறு நடிகர் நசீருதின் ஷா பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
பா.ஜ.க-வில் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் ஷர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகத்துக்கு எதிரான சில சர்ச்சை கருத்துக்களை கூறியது பெரும் விவாதமானது. நாள்கள் கடந்தாலும் தற்போது வரை அதன் அதிர்வலை அடங்கவில்லை. ஈராக், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், ஈரான், ஜோர்டான், பஹ்ரைன், மாலத்தீவு, ஆஃப்கானிஸ்தான் உட்பட 15-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த சம்பவத்திற்கு எதிராக தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தி உள்ளன. நபிகள் நாயகம் குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்ட மற்றொரு பா.ஜ.க நிர்வாகி நவீன் ஜிண்டல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல நடிகர் நசீருதின் ஷா, “இது போன்ற நபர்களுக்கு கொஞ்சம் நல்ல புத்தியை புகட்டுமாறு நான் பிரதமரிடம் நேரடியாக கோரிக்கை வைக்கிறேன். அவர் ரிஷிகேஷின் தர்ம ஸன்ஸாத் படி கூறப்பட்டிருப்பதை நம்பினால் அதை கூறட்டும், நம்பாவிட்டால் அதையாவது கூற வேண்டும். பிரதமர் தலையிட்டு மேலும் இந்த விவகாரத்தில் விஷம் பரவுவதை தடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு எடுத்தது கொஞ்சம் தாமதமான நடவடிக்கை. அவர்கள் வாயைத் திறந்து இதுபோன்ற கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கவே ஒரு வாரம் ஆகியுள்ளது. இதே போன்ற சம்பவம் பாகிஸ்தானிலோ ஆஃப்கானிஸ்தானிலோ நடந்திருந்தால் உடனே மரண தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் இங்கு பாதிக்கப்பட்டிருக்கும் நபிகள் நாயகத்தை பின்பற்றுபவர்களுக்கு ஆறுதல் கூட கிடைக்கவில்லை.” எனக் கூறியுள்ளார்.
பாஜக நிர்வாகி நுபுர் ஷர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு மன்னிப்பு கேட்டிருந்தார். அதில் அவர் இந்து கடவுளை சிலர் அவமதித்தாலேயே இவ்வாறு பேசியதாக கூறினார். இதைக் குறிப்பிட்டு பேசிய ஷா, “இதை முறையான மன்னிப்பாக எடுத்துக் கொள்ள முடியாது. மறுபடியும் இது போன்ற வெறுப்பான ஒரு பேச்சு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. நீங்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பற்றி பேசிவிட்டு ஒரு வருடம் சிறை தண்டனை பெறுவதும், இனப்படுகொலை செய்துவிட்டு கையில் ஒரு அடியை வாங்குவதும் முற்றிலும் முரண்பாடானது. இங்கு நிறைய இரட்டை தர நிர்ணயம் மற்றும் ஏற்றதாழ்வுகள் உள்ளன.” எனக் கூறினார்.
மேலும் இந்த விவகாரம் பற்றி பேசிய நசீருதின் ஷா, இதுபோன்ற விவகாரங்களில் வெறுப்பு மிகவும் அதிகமாக மக்களிடம் பரவுவதில் சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் பங்கு அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டார். பா.ஜ.க நிர்வாகி நுபுர் ஷர்மா தொடர்ந்து பல கொலை மிரட்டல்களை சந்தித்து வருகிறார். அது குறித்தும் கண்டனம் தெரிவித்தவர், “நுபுர் ஷர்மாவுக்கு எதிரான இந்த வழி தவறானது. இதுபோன்ற காரணத்தால் தான் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் கலவர நிலையில் உள்ளன” எனக் கூறினார்.