மேகதாது விவகாரத்தை விவாதிப்பது என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
எதிர்வரும் 17ம் தேதி நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் என ஆணையத்திற்கு கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அதற்கு ஆணையமும் அனுமதி அளித்திருந்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது மேகதாது விவகாரம் குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க கூடாது என்றும், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மீறுவது போல் கர்நாடக அரசின் செயல்பாடும் ஆணையத்தின் முடிவும் உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பதிலளிக்கையில்,
‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ என்பது உச்ச நீதிமன்றத்தால் உருவாக்கப்பட்டது. காவிரியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் மட்டுமே ஒப்புதல் வழங்க முடியும்.
அதே நேரத்தில் தமிழக அரசால் மத்திய அரசுக்கு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கும். அப்படி பிறப்பிக்கும் பட்சத்தில் இவ்வழக்கில் கர்நாடக அரசு தங்களுடைய நிலைப்பாட்டை பதிலாக அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
ALSO READ: நெருங்கும் தேர்தல்.. குஜராத்தில் கட்சியின் ஒட்டுமொத்த குழுவையும் கலைத்தது ஆம் ஆத்மி!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM