ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது, செவ்வாய்க்கிழமை அன்று 245 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது, இந்த மையத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இக்கல்வி நிறுவனத்தில் ஏற்கனவே 18 பேர் கொரோனா தொற்று பாதிப்பு ஆளாகியுள்ளனர். இங்கு பிற மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் உள்ளனர். தற்போது, ஐஐடி மெட்ராஸ், ஸ்ரீ சத்ய சாய் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் கொரோனா பாதிப்பு கிடையாது. கேளம்பாக்கம் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் முறையே 196 மற்றும் 23 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால், அவையும் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
தற்போது, கல்வி நிறுவனங்களில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனால், குடியிருப்பு பகுதிகளில் கொரோனா பரவலை காணமுடிகிறது. 17 மாவட்டங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். மாநிலத்தில் 22 ஆக இருந்த தினசரி பாதிப்பு, தற்போது 150ஆக அதிகரித்துள்ளது.
ஜூன் 12 அன்று 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மத்திய அரசு நிர்ணயித்த விலையில், பூஸ்டர் தடுப்பூசிகளை தகுதியுடைய நபர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் செலுத்தலாம்.
அதாவது, 18 முதல் 59 வயதுடையோர், 2 ஆம் டோஸ் செலுத்தி 9 மாதங்கள் முடிவடைந்திருந்தால் தனியார் மருத்துவமனைகளில் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளலாம். 60 வயதுக்கு மேற்பட்ட அரசு மருத்துவமனையிலே பூஸ்டர் டோஸ் செலுத்திகொள்ளலாம் என்றார்.