சென்னை: தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதி 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மாநிலங்கள், மாவட்டங்கள் வாரியாக கடைகள், நிறுவனங்களை திறந்து வைப்பதில் அந்தந்த பகுதியின் சூழலுக்கேற்ப நேரம் நிர்ணயிக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசின், கடைகள் மற்றும் நிறுவனங்கள் (பணி ஒழுங்குமுறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள்) சட்டம் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்டது. அந்த சட்டப்படி, நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகள், உணவகங்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதை மாநிலங்கள் அப்படியே பின்பற்றலாம் அல்லது அந்தந்த மாநிலங்களின் சூழல், நடைமுறை தேவைகள் அடிப்படையில் மாற்றியும் அமல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
நாட்டிலேயே முதன்முதலாக கடந்த 2018-ல் இந்த சட்டத்தை மகாராஷ்டிர அரசு அமல்படுத்தியது. தமிழகத்தை பொறுத்தவரை, 2017-ம் ஆண்டு மார்ச் 22-ம் தேதி வரை ஓராண்டுக்கு மட்டும் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பின், அனுமதி மறுக்கப்பட்டது. இரவு 10 அல்லது 11 மணிக்குமேல் கடைகள், நிறுவனங்கள் இயங்குவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்கள் இரவு நேரத்தில் பணிமுடித்து வரும்போது உணவு கிடைக்காமலும், உரிய பாதுகாப்பின்மை காரணமாகவும் சிக்கல்களை அனுபவித்து வந்தனர்.
இந்தச் சூழலில் 2019-ம் தொழிலாளர் ஆணையரின் பரிந்துரையை ஏற்று கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்பதற்கான அரசாணை 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதனிடையே, கரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் இறுதியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின், கரோனா பரவல் குறைந்ததும் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனாலும், இரவு நேரத்தில் கடைகள், நிறுவனங்கள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், கடைகள், நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க 2019-ம் ஆண்டு அளிக்கப்பட்ட 3 ஆண்டு அனுமதி, நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இந்த அனுமதியை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தமிழக தொழிலாளர் துறை செயலர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசிதழில் அவர் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்கள் நலன்கருதி, ஜூன் 5-ம் தேதி முதல், 10 அதற்குமேல் பணியாளர்களைக் கொண்ட கடைகள், நிறுவனங்கள், 24 மணி நேரமும் இயங்க அடுத்த 3 ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில், விதிகளை தளர்த்தி ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கான நிபந்தனைகளையும் அறிவித்துள்ளார்.
அதன்படி, பணியாளர் ஒவ்வொருவருக்கும் சுழற்சி முறையில் வாரம் ஒருநாள் விடுப்பு அளிக்க வேண்டும். பணியாளர்கள் பெயரை பதிவு செய்வதுடன், அனைவரின் பார்வையில் படும்வகையில் காட்சிப்படுத்த வேண்டும். பணியாளர்களின் சம்பளம், கூடுதல் பணி நேரத்துக்கான சம்பளம் ஆகியவற்றை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். தினமும் 8 மணி நேரம், வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் யாரையும் வேலை செய்ய பணிக்கக் கூடாது.
கூடுதல் பணி நேரம் என்பது, தினமும் பத்தரை மணி நேரத்தையும், வாரத்துக்கு 57 மணி நேரத்தையும் தாண்டக் கூடாது. இதை மீறி யாரும் பணியாற்றுவது தெரிந்தால், உரிமையாளர் அல்லது மேலாளர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண் ஊழியர்கள்
பெண் ஊழியர்கள் இரவு 8 மணிக்குமேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. அவர்களிடம் இருந்து எழுத்து மூலம் சம்மதம் பெற்று, இரவு 8 முதல் காலை 6 மணிவரை பணியாற்ற அனுமதிக்கலாம். அதற்கான பாதுகாப்பை நிறுவனம் வழங்க வேண்டும். ‘ஷிப்ட்’ அடிப்படையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி வழங்க வேண்டும். பணியாளர்களுக்கான ஓய்வறை, கழிப்பறை, பாதுகாப்பு பெட்டக வசதிகள் வழங்க வேண்டும்.
பெண்களுக்கு பாலியல் தொந்தரவு இருந்தால், அதுபற்றிய புகார்களை பெற குழுவை உரிமையாளர்கள் அமைக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் கடை உரிமையாளர்கள் அல்லது மேலாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு யாருக்கு பொருந்தும் என்று தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பத்து அல்லது அதற்குமேல் பணியாளர்களைக் கொண்ட உணவகங்கள், கடைகள், நிறுவனங்களுக்கு இது பொருந்தும். டாஸ்மாக் மதுபானக் கடைகள், சிறு கடைகள், தேநீர் கடைகள், சிறு உணவகங்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது’’ என்றனர்.