ரெப்போ வட்டி விகிதம் உயர்வு; கல்விக்கடன் வட்டி விகிதமும் உயருமா? -மாணவர்களின் நிலை என்னவாகும்?

உயர்படிப்புக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது சோதனையான காலமாக இருக்கப்போகிறது. கல்விக் கடனுக்கும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் மாணவர்களுக்கு குறிப்பாக, வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்குப் பெரும் சிக்கல் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் கல்வித் துறை சார்ந்த ஆர்வலர்கள்.

கல்வி கடன்

இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் 0.40% அளவுக்கு ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. ரிசர்வ் வங்கியானது இன்றும் (08/06/22) ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.50% அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதனால் இனிவரும் நாள்களில் கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் உயர்ந்து, மாதந்தோறும் கட்டவேண்டிய தவணை கணிசமாக உயரும் என்று பலரும் அச்சப்படுகின்றனர்.

கடன் வாங்குபவர்களுக்குத் திண்டாட்டம்..!

கல்விக் கடன் உள்பட அனைத்துக் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்தால், வங்கிகளுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால், கடன் வாங்குபவர்கள் திண்டாட வேண்டியிருக்கும் என்றும் ஏற்கெனவே வாங்கிய கடனைக் கட்டிமுடிக்க அதிகமான தொகை கட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்விக்கடன்

குறைந்த வட்டியில் கல்விக் கடன் வங்கிகள்..!

தற்போதைய நிலையில், ஒரு சில வங்கிகள் சுமார் 7 – 7.5 சதவிகிதத்திற்கும் குறைவான வட்டி விகிதத்தில் கல்விக் கடனை வழங்கிவருகின்றன. அவ்வாறு குறைந்த வட்டியில் கல்விக் கடன் வழங்கும் சில வங்கிகள் பற்றிய விவரம் இங்கே தந்திருக்கிறோம்…

ஐ.டி.பி.ஐ பேங்க்!

6.75 சதவிகிதத்தில் இந்த பொதுத்துறை வங்கி கல்விக் கடன் வழங்குகிறது. இந்த வங்கியில் ரூ.20 லட்சம் கல்விக் கடன் வாங்கினால் ஏழு ஆண்டுகள் திருப்பி செலுத்தும் மாதத்தவணை ரூ.29,942-ஆக இருக்கிறது.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ரூ.20 லட்சம் கல்விக்கடனுக்கு 6.85% வட்டி விதிக்கிறது. ஏழு வருட கால அவகாசம் கொண்ட அத்தகைய கடனுக்கான இ.எம்.ஐ ரூ.30,039- ஆக இருக்கும்.

பேங்க்

அடுத்ததாக, குறைந்த வட்டியில் கல்விக் கடன்களை வழங்கும் வங்கிகளில் இந்தியன் வங்கியும் ஒன்று. இந்த வங்கி கல்விக்கடனுக்கு 6.9% வட்டி விதிக்கிறது. ரூ.20 லட்சம் கல்விக்கடன் வாங்கினால் மாதத்தவணை ரூ.30,088 கட்ட வேண்டியிருக்கும்.

ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய மூன்று வங்கிகளும் 7% வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்குகிறது. ரூ.20 லட்சம் கல்விக்கடன் வாங்கினால் மாதத்தவணை ரூ.30,185-ஆக இருக்கும்.

பேங்க் ஆப் பரோடா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய முன்னணி பொதுத்துறை வங்கிகள் 7.15% வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்குகின்றன. இந்த வங்கியில் ரூ.20 லட்சம் கல்விக்கடன் வாங்கினால், ஏழு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ வங்கியில் கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் 7.25 சதவிகிதமாக உள்ளது. ஏழு ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலம் கொண்ட ரூ.20 லட்சம் கடனில், இஎம்ஐ ரூ.30,340-ஆக இருக்கும்.

அதேபோல், அரசு வங்கிகளான பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளும் எஸ்.பி.ஐ வங்கியைப் போல 7.25 சதவிகிதத்திலேயே கல்விக் கடனை வழங்குகின்றன.

கனரா வங்கி கல்விக் கடனுக்கு 7.30% வட்டியைப் பெறுகிறது. இந்த வங்கியில் ரூ.20 லட்சம் கல்விக்கடனுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.30,480 தவணை செலுத்த வேண்டும்.

கல்விக்கடனை பொருத்தவரை, செயலாக்கக் கட்டணம் உள்பட வேறு எந்த கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுள்ள நெருக்கடியான நிலையில் மாணவர்கள் மீதும், பெற்றோர்கள் மீதும் சுமையை அதிகரிக்காமல் இருக்க, வங்கிகள் கொஞ்சம் கரிசனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்க்கின்றனர்.

கல்விக் கடன்

மேலே சொல்லப்பட்ட விவரங்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு முன்பிருந்தவைதான். ரிசர்வ் வங்கி தற்போது இருமுறை ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தி இருப்பதால், இனிவரும் நாள்களில் கல்விக்கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்த வாய்ப்புண்டு. அப்போது மாதந்தோறும் செலுத்தும் தொகை அதிகரிக்கும் என்பதை மனதில் கொள்வது நல்லது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.