எப்படி முடிவானது நயன் விக்னேஷ் திருமணம்?

தென்னிந்தியாவே அடிக்கடி கேட்ட கேள்வி, ‘நயனுக்கு எப்போ கல்யாணம்?’ இப்போ கல்யாணம், அப்போ கல்யாணம் என்று தொடங்கி 22-02-2022 என்று கற்பனையாகவே ஒரு தேதியையும் நிச்சயித்து வதந்தியைப் பரப்பினார்கள். எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு சுபமான பதில், மகிழ்ச்சிகரமான செய்தி கிடைத்துவிட்டது. நீங்கள் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது நயனுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ‘டும் டும் டும்’ முடிந்திருக்கும். எப்படித் திட்டமிட்டார்கள் இந்தத் திருமணத்தை?

நயனும் விக்கியும் திருமணம் செய்வது என்று நீண்ட நாள்களுக்கு முன்பே முடிவெடுத்துவிட்டாலும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைக்கு வந்ததற்குப் பிறகே தங்களின் திருமணம் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆனால் கொரோனா, லாக்டௌன் காரணமாகப் பட ரிலீஸும் தள்ளிப்போனது; திருமணமும் தள்ளிப்போனது. கடந்த மாதம் படம் வெளியான நிலையில் தங்களின் திருமண வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டனர் இருவரும்.

முதலில் திருப்பதியில்தான் திருமணம் நடப்பதாக இருந்தது. முக்கியமான 150 பிரபலங்கள் கலந்துகொள்ளவிருந்த நிலையில், அவர்களையும் விருந்தினர்களாக வரவழைத்து திருப்பதியில் திருமணம் நடத்த இயலாத சூழல். உடனடியாக பிளானை மகாபலிபுரத்துக்கு மாற்றினர். மகாபலிபுரம் அருகே Sheraton Grand ரிசார்ட்ஸில் கிராண்டாகவே திருமணம்.

திருமண நிகழ்வுக்கு விக்னேஷ் சிவன் பெற்றோர்கள் மற்றும் நயனின் பெற்றோர்கள் அனைவரும் ஒரு வாரம் முன்பே Sheraton Grand வந்துவிட்டனர். கிட்டத்தட்ட இங்கிருக்கும் அத்தனை அறைகளையும் திருமணத்திற்காக முன்பதிவு செய்துவிட்டனர். ஹோட்டலே நயன் – விக்கி கைவசம். கண்ணாடிப்பேழை கொண்ட மேடையில் கடலலைகளின் ஆசீர்வாத ஓசை ஒலிக்க, கவித்துமான திருமணத்துக்கு நாள் குறித்துவிட்டார்கள்.

திருமணச் செய்தி வெளியானவுடனே நெட்ப்ளிக்ஸ் அக்ரிமென்ட் பேப்பர்களுடன் ஆஜராகிவிட்டார்கள். திருமண நிகழ்வுகள் முழுக்க ஓ.டி.டி தளத்திலேயே வெளியாகவுள்ளது என்பதால் மற்ற வீடியோ கேமராக்களுக்குத் தடா!

திருமணத்திற்கான காஸ்டியூம் டிசைனர்கள் முழுக்க மும்பையிலிருந்து வந்திருக்கின்றனர். பாலிவுட் ஜோடி கத்ரீனா கைப் – விக்கி கௌசல் திருமணத்துக்கு டிசைன் செய்த டிசைனர் shaadi squad டீம் நயன் – விக்னேஷ் திருமணத்துக்கும் டிசைன் செய்துள்ளனர். முக்கியமான திரைப்பிரபலங்கள் அனைவருக்கும் தங்களின் திருமண அழைப்பிதழை வெப் உதவியுடன் அனுப்பி வைத்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினுக்கு நயனும் விக்கியும் நேரில் போய் அழைப்பிதழ் கொடுத்த போட்டோ செம வைரல்!

இவர்களின் தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்துச் சென்று அனைவரின் குடும்பத்துக்கும் ஆடைகளைப் பார்த்துப் பார்த்து செலக்ட் செய்து வாங்கிக் கொடுத்துள்ளனர்.

மகாபலிபுரத்தில் ‘மாங்கல்யம் தந்துனானே’ முடிந்த கையோடு தம்பதிகள் திருப்பதி கோயிலுக்கு தரிசனம் செய்யச் செல்கிறார்கள்.

வாழ்த்துகள் நயன் – விக்கி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.