பீகார்: உடலை ஒப்படைக்க ரூ.50,000 கேட்ட மருத்துவமனை ஊழியர்… தெருக்களில் யாசகம் செய்த தம்பதி!

பீகார் மாநிலம், சமஸ்திபூரில் உள்ள தெருக்களில் வயதான தம்பதியினர் தங்களின் மகனின் உடலை மருத்துவமனையிலிருந்து மீட்க மக்களிடம் பணம் கேட்டு யாசகம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தச் சம்பவத்தின் பின்னணியை விசாரிக்கும்போது, மருத்துவமனை ஊழியர் ஒருவர், அந்த வயதான தம்பதியின் இறந்துபோன மகனின் உடலை ஒப்படைக்க ரூ.50,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்தத் தம்பதி தங்களின் ஏழ்மை நிலை காரணமாக அந்த ஊழியர் கேட்ட பணத்தை தர மறுத்திருக்கின்றனர். அதனால், `நான் கேட்ட பணத்தை கொடுத்தால் மட்டுமே உங்கள் மகனின் சடலம் உங்களிடம் ஒப்படைக்கப்படும்!’ என்று அந்த ஊழியர் கறாராக கூறிவிட்டாராம். மகனின் உடலை மீட்க வேறு வழி தெரியாமல்தான் அந்த வயதான கணவன்-மனைவி இப்படி யாசகம் கேட்டிருக்கிறார்களாம்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, இது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய இறந்தவரின் தந்தை, “சில நாள்களுக்கு முன்பு என் மகன் காணாமல் போய்விட்டான். அதன்பிறகு தற்போது, என் மகனின் உடல் சமஸ்திபூரில் உள்ள சதர் மருத்துவமனையில் இருப்பதாக எங்களுக்கு அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து எங்கள் மகனின் உடலை வாங்க மருத்துவமனைக்குச் சென்றோம். ஆனால், அங்குள்ள ஊழியர் ஒருவர், என் மகனின் உடலைக் கொடுப்பதற்கு ரூ.50,000 லஞ்சம் கேட்டார். நாங்களோ ஏழை, எங்களால் இவ்வளவு பெரிய தொகையைத் தரமுடியுமா?” என்று கூறினார்.

பீகார் – யாசகம் கேட்கும் தம்பதி

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் இது குறித்து மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் எஸ்.கே. சௌத்ரி, “இதில் சம்பந்தப்பட்டவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மனித குலத்துக்கே இதுவொரு அவமானம்” என்று கூறியுள்ளார்.

பொதுவாக மருத்துவமனைகளில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவருவதால், அவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் கிடைப்பதில்லை என்பதால், இதுபோன்று நோயாளிகளிடமிருந்து பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.