டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை இன்று மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. தற்போது குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை மாதம் 24-ம் தேதி நிறைவடைகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் வரும் சில வாரங்களில் முடியும் நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. ஓரிரு நாளில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.குடியரசு தலைவர் தேர்தலை பொருத்தமட்டில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களைத் தவிர, அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்களும், குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கலாம். ஆனால், ராஜ்யசபா, லோக்சபா அல்லது சட்டப் பேரவைகளின் நியமன உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை. அதேபோல், குடியரசுத் தலைவர் தேர்தலில் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் போட்டியிட முடியாது.கடந்த 2017ம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 17ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ம் தேதியும் நடைபெற்றது. முன்னதாக 2017ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி குடியரசு தலைவர் தேர்தலுக்கான அட்டவணையை அப்போதைய தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்தார். இந்நிலையில் புதிய குடியரசு தலைவர் தேர்தலுக்கான நடைமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. எனவே இன்று மதியம் குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்றைய நிலையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 23 சதவீத வாக்குகளும், ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 49 சதவீத வாக்குகளும் உள்ளன. புதிய குடியரசு தலைவர் வேட்பாளராக யாரை களம் இருக்கலாம் என்று அரசியல் கட்சிகள் ஆலோசனைகளை தொடங்கியுள்ளன. ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பொதுவான வேட்பாளரை அறிவிப்பதா? அல்லது ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி சார்பில் தனித்தனி குடியரசு தலைவர் வேட்பாளரை நியமிப்பதா? என்பது குறித்தும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இன்றைய நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு பிரச்னைகளில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதால், ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் தனித்தனி குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று டெல்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.