அவமானங்கள்தான் என்னை வளர்த்தன! – விஜய்காந்த் #AppExclusive

எம்‌.ஜி.ஆர்‌. அல்லது கமலைப்‌ போல சிவப்பான அழகு கிடையாது.

சிவாஜி, ரஜினி போன்ற நேர்த்தியான, சற்று வித்தியாசமான முகமும்‌ இல்லை.

நம்மில்‌ ஒருவரைப்‌ போல்‌ சாதாரணமான தோற்றம்‌. (ஏதோ கொஞ்சம்‌ வெயிட்‌ போட்டதுகூட அண்மையில்‌ தான்!) ஒரு தொழிற்சாலையிலேயோ, அரசு அலுவலகத்திலேயோ, தனிப்பட்ட வியாபாரத்திலேயோ பார்க்கக்கூடிய முகங்களில்‌ ஒன்று. கலரும்‌ நல்ல கறுப்பு! ஆனால்‌, இந்த முகம்தான்‌ அண்மைக்காலமாக தமிழ்நாடு முழுவதிலும்‌, பட்டிதொட்டிகளிலெல்லாம்‌ போஸ்டர்கள்‌ மூலமாகவும்‌ ராட்சத பேனர்கள்‌ மூலமாகவும்‌, கம்பீரமாக நின்றவண்ணம்‌ நம்மைப்‌ பார்த்துப்‌ புன்னகை புரிகிறது!

Vijayakanth’s Exclusive Interview – C

விஜய்காந்த்! இன்றைக்கு சினிமா விநியோகஸ்தர்‌களின்‌ செல்லப்‌ பிள்ளை! எழுபது படங்களுக்கு மேல்‌ நடித்துவிட்ட விஜய்காந்துக்கு இன்று தமிழகமெங்கும். இரண்டாயிரத்‌துக்கும்‌ மேற்பட்ட மன்றங்கள்‌. `இவர்‌ நடிச்சா, போட்ட காசு கட்டாயம்‌ வரும்’ என்ற, ‘கேரண்டி’ உடைய நட்சத்திரம்‌.

திரையுலகில்‌ விஜய்காந்தின் வளர்ச்சி ஆச்சரியமானது. தன்னம்பிக்கைக்கும்‌, கடுமையான உழைப்புக்கும்‌ ஓர்‌ உதாரணம்‌!`ஃபிலிம்‌ ஃபேர்’ பத்திரிகையின்‌ 1986-ம்‌ ஆண்டின்‌ சிறந்த நடிகராகத்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட விஜய்காந்தை, பரிசளிப்பு விழா அன்று காலை 6.30 மணிக்கு அவரது தி. நகர்‌ அலுவலகம்‌ வீட்டில்‌ சந்தித்தோம்‌.

பர்ணசாலை மாதிரி கூரை போட்ட ஓர்‌ அறையில்‌, தரையில்‌ பாயை விரித்தபடி, கையைத் தலைக்கு உசரம்‌ வைத்தபடி படுத்திருந்தார்‌ விஜய்காந்த். அந்த அறைக்குள்‌ மூன்று திசைகளிலும்‌, பெரிய சைஸில்‌ விஜய்காந்த்‌ படங்கள்‌, ஓவியங்கள்‌.

காலை வேளையில்‌ அரைத்‌ தூக்கத்திலிருந்தவரை எழுப்பி உட்கார வைத்துப் பேச ஆரம்பித்தோம்‌. செயற்கையாக இல்லாமல்‌, இயல்பாகப்‌ பேச ஆரம்பித்‌தார்‌.”என்னைப்‌ பத்தி இந்த ஒன்பது வருடங்கள்‌, பல கோணங்கள்ல ஏராளமான செய்திகள் வந்திருக்கு. இப்ப படுத்துக்கிட்டிருந்தப்ப, புதுசா உங்களுக்குச்‌ சொல்ல என்ன இருக்குன்னு தான்‌ யோசிச்சுக்கிட்டிருந்தேன்‌…” என்று ஆரம்பித்தார்‌. பிறகு தொடர்ந்து, “இப்ப எனக்குக்‌ கிடைச்சிருக்கற ஓரளவு நட்சத்திர அந்தஸ்துக்கான உண்மையான காரணம்‌ என்னவா இருக்கும்னு நீங்க நினைக்கறீங்க?” என்று நம்மைக்‌ கேட்டார்‌.

Vijayakanth’s Exclusive Interview – C

 “ஒரு கிராமத்து இளைஞனின் முரட்டுத்தனத்துடன் `ஆக்‌ஷன் ஹீரோவா’ ஒரு முத்திரையை, விடாமுயற்சியுடன் பதித்திருக்கறதுனாலே…?” என்று தூண்டி விட்டோம்.“அதெல்லாம்‌ சினிமாவில தொடர்ந்து நடிச்சப்புறம்‌! நான்‌ சொல்ற காரணம்‌ வேற! இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்‌’னு சொல்வாங்களே அதுதான்‌. சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத்‌ தாங்கிக்கிட்டவங்களில் நானும்‌ ஒருவன்னு நினைக்கறேன்‌!என்னுடைய கண்கள்‌, கோபத்தை வெளிப்படுத்துகிற முகபாவம்‌… இந்த இரண்டும்‌ என்னைக்‌ ‘கோபக்கார இளைஞன்‌’ வேஷங்களுக்குப்‌ பொருந்த வெச்சிருக்கு. இதைப்‌ புரிஞ்சுக்காம இன்னிக்கு இண்டஸ்டரியில என்னைப்‌ பற்றி ஏராளமான விமரிசனங்கள்‌, கிண்டல் பேச்சுக்கள்‌… இதெல்லாம்‌ என்‌ காதில விழாமல்‌ இல்லை. அதனாலதான்‌ எனக்குன்னு ஒரு தனிப்‌ பாதை, சில டைரக்டர்கள்‌, நிறுவனங்கள்னு வெச்சுக்கிட்டுப்‌ பயணம்‌ பண்ணிக்கிட்டிருக்கேன்” என்றார்‌. இப்படியாகப்‌ பேட்டி, எடுத்த எடுப்பிலேயே சூடு பிடித்தது!

“உங்களுக்கு சினிமாவில நடிக்கணும்னு ஆசை எப்படி வந்தது?” –

சினிமாவுக்கு `டைட்டில்ஸ்’ மாதிரியான இந்த முக்கிய கேள்வியைக் கேட்டோம்!”அது வாழ்க்கையில்‌ ஏற்பட்ட ஒரு திடீர்‌ திருப்பம்தான். நான் பிறக்கும் போதே, கொஞ்சம் வசதியான குடும்பத்தில பிறந்தேன். அப்பா `ரைஸ் மில்’ வைத்திருந்தார். என்னைச் சுற்றி எப்பவும் பெரிய நண்பர் பட்டாளமே இருக்கும். பதினஞ்சு, இருபது பேர் இருப்போம். நண்பர்கள் வட்டாரத்துல எனக்குத்தான் கொஞ்சம் அதிக `பர்சனாலிட்டி’! ஃப்ரெண்ட்ஸெல்லாம் என்னை `தலைவரே’னு தான் கூப்பிடுவாங்க. மதுரை வீதிகள்ல நின்னு அரட்டையடித்துப் பொழுதைப் போக்குவோம்.

அப்ப மதுரை ஏரியாவில பெரிய விநியோகஸ்தர்கள் சேனாஸ் பிக்சர்ஸ்தான். அந்த நிறுவன அதிபர் முகமது மர்சூக். அவர்தான் என்னைப் பார்த்துட்டு, `டேய், உனக்குக் கண்ணு ரொம்ப நல்லா இருக்கு. நிச்சயம் நீ சினிமாவில நல்லா வருவே’னு சொன்னார். பிறகு, அவர் சிபாரிசுல டைரக்டர் மாதவன் சார் படத்துல நடிக்க வாய்ப்பு வந்தது. `என் கேள்விக்கென்ன பதில்’ படம் அது. கொஞ்சம் சீன்லே நடிச்சு முடிச்சவுடனேயே வேறு ஒருத்தரை புக் பண்ணிட்டாங்க. `எனக்குத் தமிழ் உச்சரிப்பு சரியில்லை’, `ரொம்ப கறுப்பு’ இதெல்லாம் நான் நிராகரிக்கப்பட்டதுக்குச் சொல்லப்பட்ட காரணங்கள். சென்னை வந்து போய்க்கிட்டிருந்த நான், பாண்டி பஜார் ரோஹிணி லாட்ஜ்ல இருபதாம் நம்பர் ரூம்ல வந்து தங்கினேன். அந்த லாட்ஜூல சினிமா லட்சியத்தோடு பல இளைஞர்கள் இருந்தாங்க. பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன் இவங்கள்லாம் அந்த லாட்ஜூலதான் இருந்தாங்க.

Vijayakanth’s Exclusive Interview – C

 முதல்ல, டைரக்டர் எம்.ஏ.காஜா, `இனிக்கும் இளமை’ படத்தில அறிமுகப்படுத்தினார். அப்ப விளம்பரங்கள்ல என் நிஜப் பெயரான `விஜய்ராஜ்’தான் இருந்தது. அப்புறம்தான் வேறு நடிகர் விஜய்ராஜ்ங்கிற பேர்ல வந்துக்கிட்டிருக்கார்னு தெரிய வர, காஜாதான் உடனே விஜய்காந்த்னு பேர் வெச்சார்.

முதல் நாள் ஷூட்டிங், அடையாறு மேனன் பங்களாவில நடந்தது. இந்த சினிமாவுலகிலே புது நடிகன்னா யாரும் மதிக்கக்கூட மாட்டாங்க. தீண்டத்தகாதவன் மாதிரி புதுமுகங்களுக்கு சாப்பாடு போடுவாங்க. அப்ப சுதாகர், மீரா, ராதிகாவெல்லாம் ஏற்கெனவே பாப்புலர். அவங்களுக்கெல்லாம் ஏக உபசரிப்புகள்! நான் ஒரு மூலைலே நின்னுக்கிட்டிருப்பேன். ஆனா, `இனிக்கும் இளமை’ படம் வெளிவந்ததும், என் பெயர் கொஞ்சம் வெளியே தெரிய வந்தது. அதை வைத்து விடாம பல இயக்குநர்களை சந்தித்தேன். பார்க்கிறவர்கள் எல்லாருமே, `அதுதான் ஒரு ரஜினிகாந்த் இருக்காரே… நீ எதுக்கு ஒரு விஜய்காந்த்’னு சொல்லுவாங்க. அன்னிக்கு அப்படிக் கேட்ட பலருடைய படத்துல இப்ப நான் ஹீரோ. நினைச்சுப் பார்த்தா தமாஷாத்தான் இருக்கு!`அகல்விளக்கு’ படத்துக்கு எனக்கு சான்ஸ் வந்தது. இந்தப் படத்துல தான் நிறைய அவமானங்கள். அப்போ ஷோபா ரொம்ப பாப்புலர். `பிஸி’ ஆர்ட்டிஸ்ட். `அகல்விளக்கு’ படப்பிடிப்பு அன்னிக்குக் காலையிலேருந்து மத்தியானம் சாப்பாட்டு வேளை வரைக்கும் ஷோபா வரலை. எனக்கு நல்ல பசி. பசி பொறுக்காம கடைசியிலே மதியம் சாப்பிட உட்கார்ந்தேன். உடனே ஷோபா வந்துட்டாங்கனு சொல்லி, சாப்பிடக்கூட விடாம பாதியிலேயே எழுப்பி இழுத்துக்கிட்டுப் போனாங்க. ஒரு நிமிஷம் மனசு கலங்கிட்டேன்.

இதையெல்லாம் மீறி தட்டுத்தடுமாறி முன்னுக்கு வந்துக்கிட்டிருந்தேங்கறது உண்மை! டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் `சட்டம் ஒரு இருட்டறை’ படத்துக்கு என்னை புக் பண்ணினார்.

Vijayakanth’s Exclusive Interview – C

 `ஒருதலை ராகம்’ படம் அப்போ நல்லா ஓடிக்கிட்டிருந்தது. அதில நடிச்ச ஒரு நடிகர் தனக்குதான் அந்த ரோலைத் தரணும்னு டைரக்டர்கிட்ட பிரஷர் கொடுத்தாரு. ஆனால், தயாரிப்பாளர் சிதம்பரம் `நான் படம் பண்ண வந்திருக்கேன். என் இஷ்டப்படிதான் படம் பண்ணுவேன். என் படத்திலே ஒரு தமிழன்தான் நடிக்கணும்’னு சொல்லிட்டார். `சட்டம் ஒரு இருட்டறை’ ரிலீஸாச்சு. படம் நல்ல ஹிட். பல மொழிகள்ல அந்தப் படத்தை எடுத்தாங்க. அதுக்குள்ள ரோஹிணி லாட்ஜூலேருந்து பக்கத்துக் கட்டடத்துல ஒரு ரூமுக்கு மாறியிருந்தோம். அதிலதான் நானும் என் நண்பன் இப்ராஹிமும் இருப்போம். நான் ஷூட்டிங் போயிட்டா இப்ராஹிம் தான் என் பாண்ட், ஷர்ட்டெல்லாம் `வாஷ்’ பண்ணுவான். என்னைப் பார்க்க யார் வந்தாலும், அவன் டீ, காபி வாங்கிக்கிட்டு வருவான். ரூம்ல நானும் அவனும் மட்டும் இருப்போம். `சட்டம் ஒரு இருட்டறை’ ரிலீஸானதும், ரூம்ல ஏகக் கூட்டம். ஆனால், பல மாதங்கள் சினிமாக்காரங்க பின்னால அலைஞ்சதனால நல்லவங்க யாரு, கெட்டவங்க யாருன்னு எங்களால புரிஞ்சுக்க முடிஞ்சது. ஆட்களைத் தேர்ந்தெடுத்துப் படம் ஒப்புக்கிட்டோம். அதுக்கப்புறம் சில படங்கள். எல்லாமே ஃபெயிலியர்..!

மறுபடியும் ரூம்லே நானும் இப்ராஹிமும் மட்டும்தான்! ஒரு வருஷம் சும்மா இருந்தோம். அதுக்கப்புறம்தான் பி.எஸ்.வி. பிக்சர்ஸ் `சாட்சி’ படம் வந்தது. `ஹிட்’ ஆச்சு! ஒரு வழியா நின்னேன்!”ஜில்லென்று ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுத் தொடர்ந்தார் விஜய்காந்த்…“இந்த அவமான கட்டங்களைத் தாண்டிய பிறகு மட்டும் என்ன வாழ்ந்தது? அடுக்கடுக்காகத் திரை மறைவு சூழ்ச்சிகள் நடந்துக்கிட்டேயிருந்தது.

`பார்வையின்‌ மறுபக்கம்’ ஊட்டியில்‌ ஷூட்டிங்‌. எனக்கு ஜோடி ஸ்ரீப்ரியா. ஊட்டி போய்க்‌ காத்துக்‌ கிடந்தோம்‌. அவங்க வரலை. விசாரிச்சா, `என்னோடெல்லாம்‌ அவங்க நடிக்க மாட்டேன்’னு சொல்லிட்டாங்களாம்‌. இதை அவங்ககிட்டேயே கேட்டேன்‌. அதே மாதிரி சரிதாவும்‌ என்னோட நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. எனக்குக்‌ காரணமே புரியலை. நான் அவங்ககூட நடிக்க விரும்பலைன்னு சொன்னதாக யாரோ சரிதாட்டே சொன்னாங்களாம்‌. இந்த மாதிரி பிரச்னைகளை வளரவிடக்‌ கூடாதுன்னு முடிவு பண்ணி, நானே நேரே சரிதா வீட்டுக்கு போனேன்‌. அவங்க அம்மாவும்‌ தங்கையும்‌ இருந்தாங்க. `இதப் பாருங்க… நான் உங்க பொண்ணுகூட நடிக்கமாட்டேன்னு சொல்லலை. யாராவது சொன்னதை நம்பாதீங்க. உங்க பொண்ணுகூட நடிச்சாத்தான்‌ எனக்கு வாழ்க்கைங்கறதுக்காக நான் நேரா உங்க வீட்டுக்கே வந்து கேட்கிறேன்னு நினைக்க வேண்டாம்‌. கலைஞர்களுக்குள்ள உட்பூசல்‌ இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் வந்தேன்’னு ‘பளிச்’சுனு சொல்லிட்டு வந்துட்டேன்‌. அதேமாதிரிதான்‌ ராதிகாவும்‌ என்னோட நடிக்க விருப்பப்படலை!

Vijayakanth’s Exclusive Interview – C

 ஆனால்‌, இந்த நடிகைகளெல்லாம்‌ இப்படிச்‌ சொன்னதுக்குப்‌ பின்னால ஒரு பெரிய காரணம்‌ இருந்தது..! தப்பு இவங்க பேர்ல இல்லை. இவங்களுக்குப் பின்னால பெரிய சக்திகள் இயங்கிக்கிட்டிருந்தது. `இவனோடெல்லாம் நடிச்சா, உங்க இமேஜ் கெட்டுடும்’ என்கிற பயமுறுத்தல் நிறைய இருந்தது. சாதாரண பெண்களுக்கே `தங்களுக்குப் பாதுகாப்பில்லை’னு எப்பவும் மனசுல ஒரு பயம் இருக்கும். சினிமாவில் இருக்கிற பெண்களுக்கு கேட்க வேண்டுமா? பின்னால இந்த நடிகைகள் என்னோடு நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான், அவங்க மனசுல களங்கமில்லேனு புரிஞ்சுக்கிட்டேன். எய்தவங்க யாரோ, அம்பை நொந்து என்ன பயன்?“இன்று வரைக்கும் உங்க நடிப்புத் திறமையை நிரூபிக்கிற மாதிரி படங்கள் வரலையே… உங்க வீக்னெஸை மறைக்கத்தான் பல பொது விஷயங்களில் ஈடுபடுகிறீர்களா? குறிப்பாக, தமிழ் மொழிக்காகக் குரல் கொடுப்பது, இலங்கைத் தமிழருக்காக உண்ணாவிரதம் இருந்தது, சாலிகிராமத்தில் இலவசத் திருமண மண்டபம், இலவச மருத்துவமனை…”

“என் நடிப்புத் திறமையை நிரூபிக்கச் சில படங்களில் நடித்திருக்கிறேன். `வைதேகி காத்திருந்தாள்’, `ஊமை விழிகள்’ போன்ற படங்களில் நடித்த எனக்கு ஏராளமான பாராட்டுகள், விருதுகள் கிடைத்தன. சென்ற வாரம் எனக்குக் கிடைத்த ஃபிலிம் ஃபேர் விருதுகூட `அம்மன் கோவில் கிழக்காலே’ படத்துல நடிச்சதுக்குத்தான் கிடைச்சது. ஆனா, ஒண்ணு மட்டும் ஞாபகம் வெச்சுக்குங்க. பொது நலச் செயல்கள் மட்டும் ஒரு நடிகனை நிலையா நிக்க வைக்க முடியாது. பொதுச்சேவை செய்யற நடிகர்கள் எல்லாருமே கோட்டையில் போய் உட்கார்ந்துடவும் முடியாது. அதனால, அந்த மாதிரி `பப்ளிசிட்டி’ எண்ணமெல்லாம் நிச்சயமா எனக்குக் கிடையாது.”ஆகஸ்ட் 25-ம் தேதி, விஜய்காந்த் பிறந்த நாள்.சுதந்திர தினத்தன்று, சென்னையில் `நீதிக்குத் தண்டனை’ படத்தின் 100-வது நாள் விழா. விழாத் தலைமை கலைஞர். சிறப்பு விருந்தாளி விஜய்காந்த். ஏற்கெனவே விஜய்காந்துக்கு `புரட்சிக் கலைஞர்’ பட்டம் உண்டு. ஆனால், கலைஞர் அன்றைய விழாவில் `எழுச்சிக் கலைஞர்’ என்று புதிதாகப் பட்டம் கொடுத்தார். தனக்கு வைக்கப்பட்ட மலர்க் கிரீடத்தை விஜய்காந்துக்கு வைத்தார். இப்போது தி.மு.க-வின் கவனம் விஜய்காந்த் மீது விழுந்திருக்கிறது என்பதை, வெளியே நின்று கொண்டிருந்த அவருடைய ரசிகர்களின் பேச்சிலேயே புரிந்துகொள்ள முடிந்தது. விஜய்காந்துக்கா புரியாமல் போகும்?!

– சுதாங்கன்

(16.08.1987 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் இருந்து…)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.