தேனி மாவட்ட பா.ஜ.க சார்பில் மத்திய அரசின் 8 ஆண்டுக்கால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் பங்களாமேட்டில் நேற்று மாலை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா, “ஒரு காலத்தில் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து ரௌடியிசம் செய்து வந்தவர் சேகர் பாபு. இவர் அமைச்சரான பிறகு மதுரை ஆதீனத்தை மிரட்டுகிறார்.
முதல்வர் அடக்கி வைத்திருப்பதால்தான் அமைதியாக இருக்கிறோம் என்கிறார். அமைச்சர் நாவை அடக்கிப் பேச வேண்டும். ஆதீனத்தை மட்டுமல்ல, காவி துண்டு அணிந்தவர்களை சீண்டினால்கூட விடமாட்டோம். மதுரை ஆதீனம் தலைமையை ஏற்று அவரின் பின்னே பா.ஜ.க-வினர் நிற்பார்கள்.
கோயில் நிலங்களை மீட்கிறோம் என்கிறார். ஆனால் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் `க்யூன்ஸ் லேண்ட்’ அகற்றப்படவில்லை. அவர்களிடமிருந்து ஒன்பதரைக் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும். அதையும் வசூலிக்கவில்லை. முதலில் தி.மு.க காலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட கட்டடங்களை அகற்றுங்கள்.
இந்து அறநிலையச் சட்டத்தை அமைச்சர் படிக்க வேண்டும். அதில் ஏதாவது கோயில் நிர்வாகத்தில் தவறு இருந்தால் அதைச் சரி செய்து, மீண்டும் அந்தக் கோயில் கமிட்டியிடம் வழங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் அவ்வாறு தி.மு.க அரசு நடக்கவில்லை.
தமிழ் வளர்க்கிறோம் எனக் கூறிக்கொண்டு தமிழின விரோதிகளாக தி.மு.க-வினர் இருக்கின்றனர். இவர்களால் இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழர்கள் மைனாரிட்டி ஆவார்கள். தமிழ்நாட்டில் மதுவை அறிமுகம் செய்துவைத்து தமிழர்களை குழந்தை பெற்றுக் கொள்ளக்கூட முடியாத அளவுக்கு மாற்றியிருக்கின்றனர். மது விற்பனையால் கிடைக்கும் 36 ஆயிரம் கோடி ரூபாயில்தான் அரசாங்கத்தை நடத்தி கொண்டிருக்கின்றனர்.
சிதம்பரத்தில் 1867-ல் சவுத் ஆர்காடு டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் சிதம்பரம் கோயில் சொத்து தீட்சிதர்களுக்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டிருக்கிறார். 2010-ல் கோயில்கள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சைவ, வைணவக் கோயில்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராது எனக் குறிப்பிட்டிருக்கிறது. சட்ட விதிகளை மீறி அறநிலையத்துறை செயல் அலுவலர்களை நியமித்திருக்கிறது. தற்போதுவரை அறநிலையத்துறை 10 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருக்கிறது. எனவே கோயில்களை விட்டு அரசு வெளியே செல்ல வேண்டும்.
தி.மு.க அரசு இதுவரை எந்தத் திட்டத்தையும் புதிதாக மக்களுக்கு வழங்கவில்லை. ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் அவர்களுடைய சாதனை. இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து கேட்டால் `இன்னும் 4 ஆண்டுகள் இருக்கின்றன செய்வோம்!’ என்கிறார்கள். அதற்குள் தமிழ்நாட்டில் மக்கள் வீதிக்குவந்து தி.மு.க அரசைத் தூக்கி எறிவார்கள்” என்றார்.