குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் தேதியை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவிக்க உள்ளது.
நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகிக்கிறார். இவர், கடந்த 2017 ஆம் ஜூலை மாதம் 25 ஆம் தேதி, குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார். இவரது பதவிக்காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்காக, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. டெல்லியில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், குடியரசுத் தலைவர் தேர்தல் தேதியை, தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவிக்க உள்ளார்.
நாடாளுமன்ற இரு அவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) மற்றும் மாநிலங்களின் சட்டசபை உறுப்பினர்கள் (எம்.எல்.ஏ.க்கள்) அடங்கிய தேர்தல் குழு (எலக்ட்ரோல் காலேஜ்), குடியரசுத் தலைவரை தேர்வு செய்கிறது. இந்த தேர்தலில் ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பானது நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டசபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் யார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆளும் பாஜக சார்பில் யார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற எதிர்பார்ப்பும், எதிர்க்கட்சிகள் சார்பில் யார் வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.