பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயில் என்ற சேவையை முதல்முறையாக இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) நிறுவனம் நடத்த இருக்கிறது. ஜூன் 21-ம் தேதி இதன் முதல் சேவை தொடங்குகிறது. ராமாயணத்துடன் தொடர்புடைய, ஶ்ரீராமரின் வாழ்வுடன் சம்பந்தப்பட்ட தலங்களுக்குச் செல்லும் இந்த யாத்திரையின் முக்கியமான சிறப்பம்சம், முதல்முறையாக இந்த ரயில் நேபாளத்துக்கும் செல்கிறது என்பதுதான். அந்த வகையில் இரண்டு நாடுகளுக்குச் செல்லும் முதல் ரயில் யாத்திரையாக இது அமைகிறது.
ராமாயணம், இந்தியாவின் தொன்மையான புராண நூல்களில் ஒன்று. ஸ்ரீராமரின் வாழ்க்கை சரிதத்தைச் சொல்லும் இந்தக் காவியம் அன்றைய இந்தியாவின் யாத்திரை நூலாகவே அமைந்தும் உள்ளது. அயோத்தியில் தொடங்கும் இந்தக் கதை இலங்கை வரை நீளக்கூடியது. அதோடு இன்றைய நேபாளத்தின் ஜனக்பூரோடும் தொடர்பு கொண்டது. ஸ்ரீராமரும், லட்சுமணரும், சீதாதேவியும் 14 ஆண்டுகள் இந்தத் தேசம் எங்கும் திரிந்து சந்தித்த அனுபவங்களை இன்றும் மக்கள் பார்க்க விரும்புகிறார்கள். இதனால் இன்றும் பல மக்கள் இந்தியா எங்கும் யாத்திரை செய்து ராமாயண சம்பவங்களை எண்ணி வழிபடும் வழக்கம் உண்டு.
இந்தப் புனிதமான யாத்திரையை ஆண்டுதோறும் ஐஆர்சிடிசி நிறுவனம் நடத்துவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக சுற்றுலா ரயில் மூலம் 18 நாள்கள் (17 இரவுகள் + 18 பகல்) நடக்கும் ஸ்ரீராமாயண யாத்திரையை ஜூன் 21 அன்று தொடங்க உள்ளது. டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து தொடங்கும் இந்த யாத்திரை ‘பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயில்’ மூலம் நடத்தப்பட உள்ளது.
சுமார் 600 பேர் பயணம் செய்யும் வசதியுடன் 11 3A ஏசி ரயில் பெட்டிகளைக் கொண்டுள்ளது இந்த ரயில். சுடச்சுட சைவ உணவுகளை சமைத்து வழங்க ஒரு பேன்ட்ரி கார், பயணிகள் அமர்ந்து சாப்பிட ஒரு ரெஸ்டாரன்ட் பெட்டி ஆகியவையும் இந்த ரயிலில் உள்ளன. சி.சி.டி.வி கேமரா வசதியுடன் எல்லா பாதுகாப்பு அம்சங்களும் இந்த ரயிலில் உள்ளன. 18 நாள் பிரயாணம் செல்ல, நபர் ஒருவருக்கு சுமார் ரூ.65,000 செலவாகும் எனப்படுகிறது. (தனி நபராக அறையில் தங்க கட்டணம் ரூ.71,820, இரண்டு நபர் அல்லது மூன்று நபர் அறையில் தங்க ரூ.62,370, 5 முதல் 11 வயது வரையான குழந்தைகளுக்கான கட்டணம் ரூ.56,700 என்றும் இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது).
அயோத்தியில் முதல் தரிசனத்தைத் தொடங்கும் இந்த யாத்திரையில் ராம ஜென்ம பூமி, ஹனுமன் கோயில் என தொடங்கி ராமேஸ்வரம் வரை செல்ல உள்ளது.
இந்தப் பயணத்தில் அயோத்தி சரயு கட்டம், ஜனக்பூர் (நேபாளம்) ராமர் ஜானகி கோயில், சீதாமாரி ஜானகி கோயில், நந்திகிராம் பாரத் ஹனுமன் கோயில், பக்ஸார் ராமேஸ்வர்நாத் கோயில், சித்திரகூட் சதி அனுசுயா கோயில், பிரயாக்ராஜ் கங்கை யமுனை சங்கமம், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் கங்கை ஆரத்தி வழிபாடு, ஷ்ரிங்காவெர்பூர் சாந்தா தேவி ஆலயம், காஞ்சி காமாட்சியம்மன் ஆலயம், நாசிக்கில் பஞ்சவடி மற்றும் த்ரியம்ப்கேஸ்வரர் ஆலயம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயம், தனுஷ்கோடி, ஹம்பி விருபாட்சர் மற்றும் விட்டல் ஆலயம், பத்ராசலம் சீதாராம சுவாமி கோயில் உள்ளிட்ட பல தலங்களைத் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் எந்த ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ஏறினாலும், இறங்கிக் கொண்டாலும் யாத்திரையின் கட்டணம் ஒரே மாதிரிதான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு, ஹோட்டல் செலவு, வழிகாட்டும் சேவைகள், தரிசனம் உள்ளிட்ட எல்லா செலவுகளும் இந்தக் கட்டணத்துக்குள் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தின் சிறப்பம்சம், நேபாளம் சென்று ஜனக்பூரை தரிசிப்பது. ஜனக்பூர் நேபாளத்தின் புகழ்மிக்க ஆலயம். நேபாளத்தின் தனுஷா மாவட்டத்தில் ஜனக்பூர் நகரில் இது அமைந்துள்ளது. அன்னை சீதாதேவி பிறந்த தலம். இங்கேதான் சீதாதேவிக்கு ஆலயமும் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறப் பளிங்குக் கற்களால் கட்டப்பட்ட 3 தளங்கள் கொண்ட இக்கோயில், 50 மீட்டர் உயரமும், 4,860 சதுர அடி பரப்பளவும் கொண்டது. 60 அறைகள், வண்ணக் கண்ணாடிகள், நுணுக்கமான சித்திர வேலைப்பாடுகள் கொண்ட கதவுகள், ஜன்னல்கள் கொண்ட ஆலயம் இது.
மேலும் இக்கோயில் அருகே அமைந்த மாளிகை ஒன்றில்தான் ஸ்ரீராமர் – ஜானகி திருமணம் நடந்தது என்றும் கூறப்படுகிறது. இதை நேபாளத்தில் ‘நௌ லக்கா’ கோயில் என்கிறார்கள். நௌ என்றால் ஒன்பது, லக்கா என்றால் லட்சம் என்று அர்த்தம். இக்கோயிலை கட்டிமுடிக்க அந்தக் காலத்திலேயே 9 லட்ச ரூபாய் செலவிட்டதால் இப்பெயர் வந்தது என்பர். இப்போது இருக்கும் இந்த ஆலயத்தை இந்தியாவின் திக்கம்கர் ராஜ்ஜியத்தின் அரசி விருக்ஷபானு என்பவர் 1910-ல் கட்டினார். இங்கு வந்து தரிசித்தால் திருமண வரம் கிட்டும் என்பது நம்பிக்கை.
சுமார் 8,000 கி.மீ தொலைவு நீளும் இந்த யாத்திரையில் ஏறக்குறைய இந்திய மாநிலங்கள் பலவற்றைக் காணலாம். பல கலாசார மக்களைக் காணலாம் என்பதும் சிறப்பு. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேகமாக முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்தப் பயணத்துக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் முதல்முறையாக இஎம்ஐ (தவணை முறை) கட்டண முறையையும் வழங்குகிறது.
ஸ்ரீராமரோடு தொடர்பு கொண்ட புனித யாத்திரை என்று மட்டும் இதைச் சொல்லிவிட முடியாது, பரந்து விரிந்த இந்த இந்திய தேசத்தின் பல்வேறு வாழ்வியல் மற்றும் பண்பாட்டு அம்சங்களை அறிந்துகொள்ளவும் இந்த யாத்திரை நிச்சயம் உதவும்.