காலியாக உள்ள 1456 மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பு…

டெல்லி: காலியாக உள்ள 1456 மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து உச்சநீதி மன்றம் நாளை தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

மருத்துவ முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த அதர்வ் என்ற மருத்துவர் தனக்கு இடம் ஒதுக்கப்படாததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு  உச்ச நீதிமன்ற கோடைகால சிறப்பு அமர்வு நீதிபதி எம் .ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையின்போது 1,456 மருத்துவ இடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், மத்தியஅரசையும், மருத்துவ கவுன்சிலையும் கடுமையாக சாடினர். மாணவர்களுக்கான இடங்கள் உரிய முறையில் ஒதுக்கித் தரப்படவில்லை என்றால் நீதிமன்றமே அதனை செய்ய நேரிடும் என்றும் இதற்கான இழப்பீட்டை வழங்க உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

மேலும்,  மெடிக்கல் கவுன்சிலிங் கமிட்டி, மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இவ்வளவு காலியிடங்கள் இருந்திருக்கிறது என தெரிந்தும் அதனை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததற்கு நீதிபதிகள் கண்டித்துள்ளனர். அதிகாரிகளின் பொறுப்பில்லாத செயல்பாடுகளால் எவ்வளவு மாணவர்களும் பெற்றோர்களும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒன்றரை ஆண்டுகளாக இந்த இடங்கள் காலியாக உள்ளது என்று வருத்தம் தெரிவித்ததுடன், அகில இந்திய கோட்டாவுக்கு  நடைபெற்ற கவுன்சிலிங்கிற்கு பிறகு கிடைக்கும் காலி இடங்களுக்கு இடம் கிடைக்காத மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது. அதைத் தொடர்ந்து, இரு தரப்பு சமர்ப்பிப்புகளை பரிசீலித்து நாளை விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக கூறியது.  இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்ததுடன், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.