கூகுள் மேப்ஸ் துணை கொண்டு ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்கள் தாங்கள் வசித்து வரும் பகுதியில் இருக்கும் காற்றின் தரத்தை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எப்படி என்பதை சற்றே விரிவாக பார்ப்போம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பரவலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது கூகுள் நிறுவனங்களின் பல்வேறு அப்ளிகேஷன்கள். ஜி பே, குரோம், கூகுள் பிரவுசர், கூகுள் டிரைவ், கூகுள் மேப்ஸ் என பல அப்ளிகேஷன்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையிலான பயன்பாட்டுக்காக பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று வர வழி சொல்கிறது கூகுள் மேப்ஸ். ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்ல எவ்வளவு நேரம் பிடிக்கும், எவ்வளவு தொலைவு உள்ளது என அனைத்து விவரத்தையும் சொல்வதோடு, வாய்ஸ் அஸிஸ்டண்ட்ஸ் வசதியையும் வழங்குகிறது இந்த அப்ளிகேஷன்.
இந்நிலையில், கூகுள் மேப்ஸில் வெறும் வழி மட்டுமல்லாது குறிப்பிட்ட பகுதிகளில் நிலவி வரும் காற்றின் தரத்தையும் அறிந்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன் பயனர்கள் இதனை தங்கள் போன் மூலம் அறிந்து கொள்ளலாம். பயனர்கள் வசிக்கின்ற பகுதியில் காற்றின் தரம் சுமாரா, மோசமா என்பதை அறிந்து கொள்ளலாம்.
காற்றின் தரத்தை எப்படி அறிந்து கொள்வது? – மொபைல் போனில் கூகுள் மேப்ஸ் செயலியை ஓப்பன் செய்ய வேண்டும். பின்னர் அதில் உள்ள லேயர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அதில் ஸ்ட்ரீட் வியூ, 3டி, டிராஃபிக் வரிசையில் காற்றின் தரம் (Air Quality) இருக்கும். அதனை கிளிக் செய்தால் பயனர்கள் காற்றின் தரத்தை அறிந்து கொள்ளலாம். காற்றின் தரத்தை கணக்கிடும் இந்திய அமைப்புகளுடன் இதற்காக இணைந்துள்ளது கூகுள். நலம், திருப்திகரம், மிதம், மோசம், மிகவும் மோசம் என்ற வகையில் இது வகைப்படுத்தப்பட்டுள்ளது.