பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம்; ரூ.3,050 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.!

புதுடெல்லி: பிரதமர் மோடி நாளை குஜராத் பயணம் மேற்கொள்கிறார். அங்கு ரூ.3050 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அங்கு, ஆளும்  பாஜ ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. பிரதான  எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்கட்சி மோதலில் சிக்கியுள்ளது. இதனால்  பஞ்சாப் பாணியில் தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி களமிறங்கி உள்ளது.  இதனால் மும்முனை போட்டி நிலவும் நிலை உருவாகியுள்ளது. குஜராத்தில் எப்படியும் ஆட்சியை கைப்பற்றுவது என்பதில் ஆம் ஆத்மி தீவிரமாக  இருக்கிறது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குஜராத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில் குஜராத்தில் பிரதமர் மோடி  நாளை குஜராத்தில் ரூ3,050 கோடி திட்டங்களுக்கு அடிக்கல்  நாட்டுகிறார். அப்போது, நவ்சாரியில், ‘குஜராத் பெருமை இயக்கத்தின்’  பலவகையான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி  வைப்பார். இதில், 7 திட்டங்களை தொடங்கி வைத்தல், 12 திட்டங்களுக்கு அடிக்கல்  நாட்டுதல், 14 திட்டங்களுக்கு பூமி பூஜை செய்தல் ஆகியவை அடங்கும்.  நவ்சாரியில், எம் நாயக் சுகாதார கவனிப்பு வளாகம் மற்றும் நிராலி பன்னோக்கு  மருத்துவமனையை திறந்து வைக்கிறார். அகமதாபாதில் உள்ள இந்திய தேசிய  விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மைய தலைமையகத்தையும் தொடங்கி வைக்கிறார். பயன்பாடு மற்றும் சேவைகள் அடிப்படையில், விண்வெளி  துறையில் பணியாற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும், இந்திய தேசிய  விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு  ஒப்பந்தங்கள், பரிமாற்ற நிகழ்ச்சியும் இதில் இடம் பெறும். இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘பிரதமர் மோடி வரும் 10ம் தேதி (நாளை) குஜராத் செல்ல உள்ளார். நவ்சாரியில் நடைபெற உள்ள ‘குஜராத் கவுரவ் அபியான்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, அகமதாபாத்தில் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தின் தலைமையகத்தை திறந்து வைக்கிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.