கடும் எதிர்ப்புகளை மீறி, தன்னைத் தானே திருமணம் செய்த பெண்| Dinamalar

வதோதரா : கடும் எதிர்ப்புகளை மீறி, குஜராத்தைச் சேர்ந்த பெண், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

குஜராத்தில் வதோதராவைச் சேர்ந்தவர், ஷாமா பிந்து, 24. தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இவர், தனக்கு ஜூன் ௧௧ல் திருமணம் நடக்கப் போவதாகக் கூறி, உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தார்.

இதைப் படித்து பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், ஷாமா பிந்து தான் மணமகள்; அவரே மணமகனும் கூட. ‘சோலோகமி’ எனப்படும் சுய திருமணம் செய்யப் போவதாக, பிந்து ஏற்கனவே அறிவித்திருந்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பிந்துவின் சுய திருமணத்துக்கு, பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை, தடை செய்ய வேண்டும் என சிலர் வலியுறுத்தினர்.

இது பற்றி பிந்து கூறுகையில், ”நான் யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்த விரும்பவில்லை. திருமண இடத்தை மாற்ற விரும்புகிறேன். சுய திருமணத்தை நிச்சயம் செய்வேன். இந்த முடிவில் மாற்றமில்லை,” என்றார்.
இந்நிலையில் அறிவித்த தேதியை விட மூன்று நாட்களுக்கு முன்னதாக, , பிந்து தன் வீட்டில் தன்னையே திருமணம் செய்து கொண்டார். மருதாணி, மஞ்சள் பூசும் விழா உட்பட அவரது குடும்ப வழக்கப்படி சடங்குகள் நடத்தப்பட்டன.
திருமணத்துக்கான மந்திரங்கள், ‘ரிகார்டர்’ வழியாக ஓதப்பட்டன. கழுத்தில் மாலை அணிந்து, நெற்றியில் குங்குமம் வைத்து, பிந்து தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். நாற்பது நிமிடங்களில் நிறைவடைந்த இந்நிகழ்ச்சியில், அவரது நெருங்கிய தோழியர் உட்பட 10 பேர் மட்டுமே பங்கேற்றனர்.

திருமண புகைப்படங்கள், ‘வீடியோ’வை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பிந்து கூறியதாவது:நான் திருமணமான பெண்ணாக உணர்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. அறிவித்த தேதியில் விழா நடத்தினால் பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால், மூன்று நாட்களுக்கு முன்னதாக, தோழியர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டேன்.
சுய திருமணத்துக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஏராளமானவர்கள் என் உணர்வை புரிந்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.இவ்வாறு பிந்து கூறினார்.திருமணத்துக்குப் பின் தேனிலவுக்கு கோவா செல்வேன் என, பிந்து ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.