`எங்கே எனது அண்ணன் கேப்டன்?’- ஆறுதல் கூற சென்ற இடத்தில் பிரேமலதாவிடம் கதறி அழுத தொண்டர்

கடலூர் மாவட்டம் சென்றிருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதாவை பார்த்து ‘நீ எதற்காக வந்தாய், எங்கே என் தலைவன் விஜயகாந்த்’ எனக் கதறி அழுத தொண்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் அடுத்த கீழ்அருங்குணம் குச்சிபாளையம் கிரமத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி 3 சிறுமிகள், 4 இளம்பெண்கள் என ஏழு பேர் கடந்த ஐந்தாம் தேதி உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல சென்றிருந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண தொகையை வழங்கினார்.
அதன்பின்னர் செய்தியாளரிடம் அவர் பேசுகையில், “கழிவறை வசதியில்லாததால் 7 பேரின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற உயிரிழப்பு வேறெங்கும் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிர் இழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 5 லட்ச ரூபாய் நிவாரண தொகையை உயர்த்தி, 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உயிரிழந்த 7 பேரின் நினைவாக பொதுவாக ஒரு பகுதியில் நினைவு தூண் அமைத்திட வேண்டும்.
தமிழக அரசு எல்கேஜி, யூகேஜி வகுப்புகளை அங்கன்வாடி மையத்திற்கு மாற்றியுள்ளது. தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையம் உள்ளது. எனவே அங்கன்வாடி மையம் எவ்வாறு பலனளிக்கிறது என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆட்சி மாறுகிறதே தவிர, காட்சி மாறவில்லை. மக்களுக்கு ஒதுக்கிய நிதி, லஞ்சம், ஊழல் மற்றும் அரசியல்வாதிகளுக்கு செல்கிறதே தவிர, முறையாக பொது மக்களுக்கு சென்று சேரவில்லை.
image
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேமுதிக தலைவர் பதவியை பிரேமலதா வகிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் பிறகு விஜயகாந்த் என்ன முடிவு செய்கிறாரோ, அது தான் இறுதி முடிவு” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நீரில் மூழ்கி உயிரிழந்த சுமிதா வீட்டிற்கு, பிரேமலதா விஜயகாந்த் சென்றபோது அந்த சிறுமியின் தந்தை “இங்கே நீ எதற்காக வருகிறாய், எனது அண்ணன் விஜயகாந்த் எங்கே? என் கேப்டன் எங்கே?” எனக் கேட்டு கதறி அழுதார். மேலும் `நான் கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகன், ஆறுதல் சொல்ல தலைவரை வரச் சொல்லுங்கள்’ என கதறினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.