எரிவாயு சிலிண்டர் விநியோக நடவடிக்கைகள் இன்று (09) இடம் பெற மாட்டாது என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், 3,900 மெற்றிக் டொன் எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளது. அதற்கு செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் டொலர் நிலுவைத் தொகையை இன்று செலுத்த எதிர்பார்த்திருக்கின்றோம் என்பதுடன் இந்தக் கப்பலில் உள்ள எரிவாயு 6 நாட்களுக்குப் போதுமானது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், எரிவாயு பெறுவதற்காக நேற்று பல பிரதேசங்களில் நீண்ட வரிசைகள் காணக்கூடியதாக இருந்தது. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கோட்டை நாக விகாரைக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றைய தினம் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டது. மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் நின்ற மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இதனால் வீதிப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதேவேளை, எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காகவும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்னும் நீண்ட வரிசைகள் காணக் கூடியதாக உள்ளன. எனினும் தற்போது டீசலை பெறுவதற்காகவே நீண்ட வரிசைகள் காணக்கூடியதாக உள்ளது. எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நாளாந்தம் வழங்கப்படும் பெற்றோல் மற்றும் டீசலின் அளவை நேற்று முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.