அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தமையால் தற்போதைய நெருக்கடிக்கு பொதுமக்களையும் குற்றம் சுமத்த வேண்டும் என பதவி விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
அதிகாரத்தை அரசாங்கத்திடம் கையளித்தமைக்கு பொது மக்கள் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நான் இனி நாடாளுமன்றத்திற்கு தேவையில்லை
“நான் இனி நாடாளுமன்றத்திற்கு தேவையில்லை. நிதியமைச்சராக பதவியேற்கவே நாடாளுமன்றத்திற்கு வந்தேன், தற்போது அமைச்சர் பதவியில் இருந்து விலகியதன் காரணமாக நான் நாடாளுமன்றத்திற்கு செல்லவில்லை.
தான் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் தான் ஆற்றிய பணி குறித்து தனக்கு வருத்தம் இல்லை என்றும், அதே சமயம் தலையாட்டுவதை விட இறுதியான அமைப்பு மாற்றத்தை தான் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.
கட்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உண்டு
எனது இராஜினாமாவால் வெற்றிடத்திற்கு தேசியப் பட்டியல் மூலம் பொருத்தமான ஒருவர் நாடாளுமன்றத்திற்கு வருவார் என நான் எதிர்பார்க்கிறேன், சிறிலங்கா பொதுஜன பெரமுன் தேர்தலுக்கு தயாராக உள்ளது, கட்சி வெற்றிபெறும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது,” என்று அவர் கூறினார்.
தற்போது நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் உட்பட, வெளியில் உள்ள எவரையும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அனுமதிக்க கட்சி தயாராக உள்ளது. எனினும் இதனை மேலிடம் தான் தீர்மானிக்க வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பொருளாதார நெருக்கடி நீடித்ததாகவும், நிதியமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்காக அவர்களுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்ததாகவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.