சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்றால். சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் மழைநீர் வடிகால் நடைபெற்று வரக்கூடிய நிலையில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் விவரம்:
> வேலைகளை தொடங்குவதற்கு முன் லெவல் (நிலைகள்) கட்டாயமாக எடுக்கப்பட்டு ஆலோசகர்களுடன் சரிபார்க்க வேண்டும்.
> மழைநீர் வடிகால் கட்டிய பிறகு, முறையாக வடிகாலில் நீர் செல்லவில்லை என்றால் சம்பந்தப்பட்ட பொறியாளர்களே பொறுப்பு.
> கட்டி முடிக்கப்பட்ட வடிகால்களில் தேவையான அளவிலான நீரை லாரிகள் மூலமாக நிரப்பி சரியாக நீர் தேங்காமல் செல்வதை பொறியாளர்கள் சரிபார்க்க வேண்டும்.
> விதிமுறைகளின்படி வடிகால்களின் கான்கிரிட் பணிகள் மேற்கொள்ளப்படுவதை தவறாமல் உறுதி செய்திட வேண்டும்.
> முறையான தடுப்புகள் போன்ற அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பணியின்போது பின்பற்ற வேண்டும்.
> வடிகாலின் அனைத்து நுழைவாயில்களுக்கும் சரியான சாய்வு மற்றும் கை தண்டவாள ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
> பாதுகாப்பு அம்சங்களின் குறைபாடு காரணமாக ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், சம்பந்தப்பட்ட பொறியாளர்கள்தான் பொறுப்பு.
> பணியை நிறைவேற்றுவதற்கு முன் மின்சாரம், பிஎஸ்என்எல், குடிநீர் வாரியம் ஆகிய நிறுவனங்களுக்கு மண்டல அலுவலர் எழுத்துபூர்வமாக தெரிவித்திட வேண்டும்.
> சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள் சேவைத் துறைகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.