சென்னை: சென்னையில் செப்டம்பர் மாதத்திற்குள் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலத்தில், மகாத்மா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி தெருக்களில் வெள்ள தடுப்பு சிறப்பு நிதியின் கீழ் ரூ.2.37 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் “கடந்த 2011-ம் ஆண்டு சென்னை மாநகராட்சியுடன் புறநகர் பகுதிகளில் உள்ள 8 நகராட்சி பகுதிகள், 9 பேரூராட்சி பகுதிகள் மற்றும் 25 ஊராட்சி பகுதிகள் இணைக்கப்பட்டு விரிவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. கருணாநிதி முதல்வராக இருந்த கால கட்டத்தில் இந்தப் பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள், குடிநீர் வசதிகள், சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் போன்ற பல்வேறு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக ரூ.3,870 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அதற்கான நிதி தமிழக அரசின் சார்பில் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
2011-ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளில் இந்த இணைக்கப்பட்ட பகுதிகளில் எவ்வித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ்நாடு முதல்வராக மு.க..ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து விதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சிங்காரச் சென்னை 2.0 உட்பட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இதனடிப்படையில் கடந்த காலங்களில் பருவமழையின் போது சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளிலிருந்து நிரந்தர தீர்வு காணும் வகையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வெள்ள தடுப்பு மேலாண்மை குழுவினை அமைத்து அந்தக் குழுவின் அறிக்கையின்படி சென்னை மாநகரில் பல்வேறு துறைகளுடன் இணைந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் சுமார் ரூ.4,749 கோடி மதிப்பில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநகரம் முழுவதும் இதுபோன்று பல்வேறு பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றன. மேயரும், மாநகராட்சி ஆணையரும் இந்தப் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகின்ற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டு தொடர்ந்து பணிகளை கண்காணித்து வருகின்றனர்” என்று அவர் கூறினார்.