கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விசிக அறிவிப்பு

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு சான்றோருக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம்.

சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றும் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமை வாய்ந்த சான்றோருக்கு “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு ” ஆகிய விருதுகளை 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கிச் சிறப்பித்து வருகிறோம். இந்த ஆண்டு முதல் கூடுதலாக ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்குகிறோம்

மறைந்த முதல்வர் கருணாநிதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், கே.எஸ்.அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ்.பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்ட சான்றோர் பலருக்கு இதுவரை விசிக-விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வரிசையில் 2022-ம் ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோரின் பட்டியலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறோம். இந்த ஆண்டுக்கான “அம்பேத்கர் சுடர்” விருதினை கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா அவர்களுக்கு வழங்குவதில் பெருமைப்படுகிறோம். 2022-ஆண்டுக்கான விசிக-விருதுகள் பெறும் சான்றோர் பட்டியல்:

  • அம்பேத்கர் சுடர் – கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா
  • பெரியார் ஒளி – எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை
  • காமராசர் கதிர் – விஜிபி உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம்
  • அயோத்திதாசர் ஆதவன் – முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி , செல்லப்பன்
  • காயிதேமில்லத் பிறை – எஸ்டிபிஐ தலைவர், தெகலான் பாகவி
  • செம்மொழி ஞாயிறு – தொல்லியல் அறிஞர், பேரா.கா.ராசன்
  • மார்க்ஸ் மாமணி – மறைந்த எழுத்தாளர் ஜவஹர் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.

விசிக விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.