எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நகர்வுகள்… ஒற்றைத்தலைமைக்காகவா, பாஜக-வுக்கு எதிரான அஸ்திரமா?

“தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு எதிர்க்கட்சியாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடியாரிடமே வந்து, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி யார் என்று கேள்வி எழுப்புகிறார்கள். எங்கள் கூட்டணியில் எங்கள் தயவில் நான்கைந்து இடங்களைப் பெற்ற கட்சிகளே எதிர்க்கட்சி என்றால், அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றிருக்கும் நாங்கள் யார்?…அ.தி.மு.க தொண்டர்களிடம் மட்டுமல்ல, இந்தக் கோபம் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடியாருக்கும் எழுந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் சமீபத்திய அவரின் செயல்பாடுகள்” – தொடர்ச்சியான பத்திரிகையாளர் சந்திப்புகள், காட்டமான அறிக்கைகள், கடுமையான விமர்சனங்கள் என தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய அதிரடி செயல்பாடுகளுக்கு அவர்களின் கட்சி நிர்வாகிகள் சொன்ன பதில் இது.

ஒ.பி.எஸ் – எடப்பாடி

தமிழ்நாட்டின் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தவரை அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்தித்து வந்தார். முதல்வர் என்கிற அடிப்படையில் அவரின் செயல்பாடுகள், அவர் பற்றிய செய்திகள் தொடர்ச்சியாக மீடியாக்களில் வெளியாக எப்போதும் லைம்லைட்டிலேயே இருந்தார். ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவரானபோதும் சட்டசபை நடக்கும் நாள்களைத் தவிர்த்து, மற்ற நாள்களில் பெரியளவில் மீடியாக்கள் பக்கம் தலைகாட்டாமல்தான் இருந்தார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம்தான் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களோடு அறிக்கை வெளியிட்டு வந்தார். ஆனால், சமீப நாள்களாக எடப்பாடி பழனிசாமி அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்தித்து வருகிறார். பல்வேறு விஷயங்களைச் சுட்டிக்காட்டி அரசின் நடவடிக்கைகளையும் விமர்சித்துவருகிறார். வரும் ஜூன் 23-ம் தேதி அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிற நிலையில், கட்சியில் ஒற்றைத்தலைமையாக தன்னை நிறுவிக்கொள்ளவே இப்படி கவனத்தையீர்க்கும் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார் என்கிற செய்திகள் வெளியாகின்றன. இந்தநிலையில் அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம்,

“கட்சியில் ஒற்றைத்தலைமையாக தன்னை நிறுவிக்கொள்ளத்தான் எடப்பாடியார் இப்படிக் களமிறங்கியிருக்கிறார் என்கிற செய்திகள் வெளியாகின்றன. ஆனால், அது உண்மை இல்லை. கட்சியில் ஏற்கெனவே இரண்டு தலைமைகள் இருந்தாலும், அதிகாரமிக்க நபராக எடப்பாடியார்தான் இருக்கிறார். கட்சியில் முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானவர்களின் ஆதரவு எடப்பாடியாருக்குத்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஓ.பி.எஸ்ஸைக் கேட்காமல், எடப்பாடியார்கூட ஏதாவது முடிவுகளை எடுத்துவிடுவார். ஆனால், எடப்பாடியாரைக் கேட்காமல் ஓ.பி.எஸ் எந்த முடிவுகளையும் எடுக்க மாட்டார். அதனால், இப்போதைய அதிரடிக்கு அது காரணம் அல்ல.

பன்னீர் செல்வம் – எடப்பாடி பழனிசாமி

66 எம்.எல்.ஏக்களுடன் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக நாங்கள்தான் இருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், ஆளும் கட்சியான திமுக-வுக்கும் எங்களுக்கும் சில லட்ச வாக்குகள் மட்டுமே வித்தியாசம். கிட்டத்தட்ட ஒரு கோடியே ஐம்பது லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு சட்டமன்றத்திலும் வெளியிலும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், அதிரடியாக ஏதாவது செய்து மீடியா கவனத்தின்மூலம் பாஜக நாங்கள்தான் எதிர்க்கட்சி என்கிற பிம்பத்தை உருவாக்கப்பார்க்கிறது.

பல மாவட்டங்களில் இருந்து காசு கொடுத்து ஆள்களை கூட்டிவந்து நாங்கள் வளர்ந்துவிட்டோம் என்கிற தோற்றத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால்,படித்த மக்களையே அப்படி நம்பவைக்குற அளவுக்கு அவர்களின் திட்டங்கள் இருக்கின்றன. அதனால்தான், எதிர்க்கட்சித் தலைவரிடமே வந்து, யார் எதிர்க்கட்சி என்று என்று கேட்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

இந்த நேரத்தில்தான், பல்வேறு துறைகளில் இருக்கும் அதிமுக நலம் விரும்பிகள், நடுநிலையாளர்கள், எடப்பாடியாரைச் சந்தித்திருக்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சியாக உங்கள் இடத்தை யாருக்கும் விட்டுத் தரக்கூடாது. நீங்களும் இனி அசுர வேகத்தில் களத்தில் இறங்கவேண்டும். இந்த ஆட்சியில் நிகழும் அவலங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும். அந்த இடத்தில் முதலில் நீங்கள் இருக்கவேண்டும். சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், சட்டமன்ற செயல்பாடுகளைத் தாண்டி பொதுமக்கள், இளைஞர்கள் மத்தியில் நிற்க, அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்திக்கவேண்டும், மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்கிற ஆலோசனையை அளித்திருக்கிறார்கள்.

அதிமுக போராட்டம்

அதுமட்டுமல்லாது, தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்காமல் இருப்பதும் பாஜகவுக்கு பெரிய ப்ளஸ்ஸாக இருக்கிறது. அவர்கள் பங்கேற்காவிட்டாலும் அவர்களின் கொள்கைகள் சார்ந்து யாராவது கலந்துகொள்ளும்போது தேர்தல் களத்தில் அதற்கான க்ரெடிட் பாஜகவுக்குத்தான் போகிறது. ஆனால், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கொள்கையளவில் பெரிய வேறுபாடு கிடையாது. யார் ஆட்சியில் யார் என்ன செய்தார்கள் என்பதை மற்றவர்கள் பேசுவதைவிட கட்சி நிர்வாகிகள் பேசினால்தான் சரியாக இருக்கும். இந்த மாற்றங்களை எல்லாம் நீங்கள் உடனடியாகச் செய்யாவிட்டால், கொஞ்சம் கொஞ்சமாக பொன்னையன் சொன்ன கருத்து உண்மையானாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை’ என அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதற்குப்பிறகு எடப்பாடியாரின் அதிரடி ஆட்டம் ஆரம்பித்தது. இனி போராட்டங்களிலும் அதிமுக கொடிகள் ஆயிரக்கணக்கில் பறப்பதை நீங்கள் காணலாம்” என்கிறார்கள் உறுதியாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.