மண் வளத்தை மேம்படுத்த மாநில அரசு முழு நேர்மையுடன் செயலாற்றும்: சத்குரு முன்னிலையில் ம.பி. முதல்வர் உறுதி

போபால்: ”மண்ணில் 3 – 6% கரிம வளத்தை அதிகரிக்க எங்களுடைய அரசு முழு நேர்மையுடன் செயல்படும்” என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சத்குரு முன்னிலையில் வாக்குறுதி அளித்தார்.

இது குறித்து ஈஷா வெளியிட்ட தகவல்: மண் காப்போம் இயக்கம் சார்பில் போபாலில் நேற்று (ஜூன் 9) நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், ”சத்குரு ஓர் ஆன்மிக மகான். அவர் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான சுற்றுச்சூழல் அக்கறையையும், ஆன்மிக செயல்பாடுகளையும் செய்து வருகிறார்.

மண் வளத்தை மேம்படுத்துவதற்காக அவர் அளித்துள்ள கொள்கை ஆவணத்தை (Policy document) மத்தியப் பிரதேச அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதை நாங்கள் விரிவாக ஆராய்ந்து முழு நேர்மையுடன் செயல்படுத்துவோம்” என கூறினார்.

சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, ”மண் சூழலியலை பொறுத்தவரை தேச எல்லைகள் என்பது அர்த்தமற்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பூமியில் நடக்கும் சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கு, குறிப்பாக மண் அழிவிற்கு வேற்று கிரகத்தில் இருக்கும் தீய சக்திகள் காரணம் இல்லை.

ஏலியன்கள் இந்த பூமியை அழிக்க நினைக்கவில்லை. இந்த பூமியில் வாழும் மனிதர்களின் மகிழ்ச்சி மற்றும் நலமான வாழ்வின் தேடலால் தான் இந்த சீரழிவு நடக்கிறது.

அந்த வகையில் நாம் ஒவ்வொருவரும் தெரிந்தோ, தெரியாமலோ இந்த அழிவிற்கு காரணமாக உள்ளோம். இதற்கு ஒரே வழி, நாம் ஒவ்வொரும் மண் அழிவை தடுத்து, இழந்த வளத்தை மீட்டெடுப்பதற்கான தீர்வு செயல்முறையில் பங்கெடுக்க வேண்டும். நம்மிடம் மிக குறைவான காலமே உள்ளது. இப்போது நாம் உரிய சட்டங்களை இயற்றி செயல்பட தொடங்கினால் தான் அடுத்த ஒன்று அல்லது 2 பத்தாண்டுகளில் இந்தப் பாதிப்பை நம்மால் சரி செய்ய முடியும்” என்றார்.

உலக நாடுகள் மண் வளத்தை மீட்டெடுக்க உரிய சட்டங்களை இயற்ற வலியுறுத்தி ‘மண் காப்போம்’ இயக்கத்தை சத்குரு தொடங்கியுள்ளார். இதற்காக அவர் 100 நாட்களில் 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்ட அவர் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா நாடுகள் வழியாக மே 29-ம் தேதி இந்தியா திரும்பினார்.

பின்னர், குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வழியாக நேற்று மத்திய பிரதேசம் வந்தார். இதை தொடர்ந்து இன்னும் சில மாநிலங்களுக்கு பயணித்து ஜூன் 21-ம் தேதி தமிழகத்தில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.