கடன் தொல்லை… கந்து வட்டி கொடுமை – சென்னையில் அடுத்தடுத்து 4 பேர் தற்கொலை!

சென்னை, கொளத்தூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் சுதாகர். இவர் மனைவி மகேஸ்வரி. இவர், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலைசெய்து வருகிறார். சுதாகர், பாஸ்ட்புட் கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள். செங்குன்றம் பகுதியில் சுதாகர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அதற்குப் பணம் தேவைப்பட்டதால் கொளத்தூர் குமரன்நகரைச் சேர்ந்த மைதிலியிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அதற்கு நிரப்பப்படாத செக் ஒன்றையும் சுதாகர் மைதிலியிடம் கொடுத்திருக்கிறார்.

தற்கொலை

பணத்தைக் கேட்டு மைதிலி மிரட்டியதால் மனமுடைந்த சுதாகர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக ராஜமங்கலம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து மைதிலியைக் கைதுசெய்தனர். அவர்மீது கந்துவட்டிக் கொடுமை பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்த போலீஸார், விசாரணைக்குப் பிறகு மைதிலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இன்னொரு சம்பவம்:-

சென்னை அரும்பாக்கம், ஜானகிராமன் காலனியைச் சேர்ந்தவர் கோபாலசாமி (65). இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கேன்டின் நடத்தி வந்தார். இவரின் மனைவி பானுமதி. இவர்கள் மகன் கண்ணபிரான் (38). கம்ப்யூட்டர் தொடர்பான தொழில் செய்துவந்தார். இவர்களின் வீடு நேற்று நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. மேலும் கண்ணப்பிரான், தன் நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். `இந்த உலகில் எனக்கு வாழப் பிடிக்கவில்லை!’ என்று குறிப்பிட்டு அவர் அனுப்பிய வாய்ஸ் மெசேஜைப் பார்த்த அவரின் நண்பர்கள், அவரை செல்போனில் தொடர்புகொண்டனர். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை.

தற்கொலை

இதையடுத்து கண்ணபிரானின் நண்பர்கள் சிலர் வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது மூன்று பேரும் இறந்து கிடப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சியடைந்த கண்ணபிரானின் நண்பர்கள், அரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கதவை உடைத்து மூன்று பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்றிரவு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “கண்ணபிரான், இந்த வீட்டை கடன் வாங்கி கட்டியிருக்கிறார். அதனால் அவருக்கு கடன் பிரச்னை இருந்திருக்கிறது. மேலும் கண்ணபிரானின் மனைவி வித்யா, கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு அவரைப் பிரிந்து பெங்களூருக்குச் சென்றுவிட்டார். அதனால் கண்ணபிரான் மனவருத்தத்தில் இருந்தார். இந்தச் சூழலில்தான் மூன்று பேரும் தற்கொலை செய்திருக்கிறார்கள். கடன் தொல்லை காரணமாக இவர்கள் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மேலும் தற்கொலைக்கு முன்பு கண்ணபிரான் எழுதிய கடிதமும் கிடைத்திருக்கிறது. அதில், `கடன் பிரச்னை காரணமாகத் தற்கொலை செய்துகொள்கிறோம். எங்களின் சாவுக்கு யாரும் காரணம் இல்லை!’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

டி.ஜி.பி சைலேந்திரபாபு

அதனால் கண்ணபிரான் யாரிடம் எவ்வளவு ரூபாய் கடன் வாங்கினார் என்று விசாரித்து வருகிறோம். கண்ணபிரான் தன்னுடைய வீட்டிலிருக்கும் கம்ப்யூட்டர் லேப்டாப்களை நண்பர்கள் யாராவது எடுத்தி பயன்படுத்திக் கொள்ளும்படியும் வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.

டி.ஜி.பி சைலேந்திரபாபு சில தினங்களுக்கு முன்புதான் ஆபரேஷன் கந்து வட்டி என்று புதிய உத்தரவை பிறப்பித்திருந்தார். இந்தச் சூழலில் கண்ணபிரான் குடும்பத்தோடு கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.