கோவையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இரண்டு புதிய மேம்பாலங்களை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்.
கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் ஹவுசிங் யூனிட் முதல், ராமசாமி திருமண மண்டபம் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கிட்டத்தட்ட 29 தூண்களுடன் உயர்மட்ட மேட்பாலம் அமைக்கும் பணி கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.
கவுண்டம்பாளையம் பகுதியில் சர்வீஸ் சாலைகள் அமைக்கும் பணியும் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
மேலும் கோவை – திருச்சி சாலையில் சுங்கம் முதல் ராமநாதபுரம் வரையில் மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் இந்த இரண்டு மேம்பாலம்களும் கட்டி முடிக்கப்பட்டு வெகு நாட்களாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிப்பதால் இந்த பாலங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த இரண்டு மேம்பாலங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொளி காட்சி வாயிலாக நாளை திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.