பப்ஜி விளையாடுவதை தடுத்ததற்காக தனது தாயை 16 வயதே ஆன மகன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த விவகாரத்தில், நாளுக்கு நாள் அதிர்ச்சிக்கரமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர், மேற்கு வங்க மாநிலத்தில் பணியாற்றி வரும் நிலையில், அவரின் மனைவி, 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயதான மகன் மற்றும் 10 வயதான மகள் ஆகிய 3 பேர் மட்டும் லக்னோவில் தனியாக வசித்து வந்துள்ளனர். இதில் அவரின் மகன் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானதால், கடந்த வாரம் பள்ளி நிர்வாகம், சிறுவனின் பெற்றோரை அழைத்து கண்டித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் சில தினங்களாக அந்தச் சிறுவன் கோபத்தில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் செல்ஃபோனை எடுத்து பப்ஜி விளையாடிக் கொண்டிருந்துள்ளான். இதனைப் பார்த்த சிறுவனின் தாயார், செல்ஃபோனை அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக வாங்கியிருக்கிறார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்தச் சிறுவன், வீட்டின் பீரோவில் இருந்து தனது தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து தாயாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் சம்பவ இடத்திலேயே சிறுவனின் தாயார் உயிரிழந்தார்.
தாயார் இறந்துவிட்டார் என்று நினைத்து, அவரது உடலை பக்கத்தில் இருந்த அறை ஒன்றிலும், 10 வயது தங்கையை மிரட்டி மற்றொரு அறையிலும் வைத்து அந்தச் சிறுவன் பூட்டியுள்ளான். பின்னர் தனது நண்பர்கள் இருவருக்கு போன் செய்து, அவர்களை வீட்டுக்கு வரவழைத்து, ஆன்லைனில் முட்டைக் குழம்பு ஆர்டர் செய்து சாப்பிட்டதுடன், நண்பர்களுடன் சேர்ந்து ‘Fukrey’ என்ற நகைச்சுவை இந்திப் படத்தை வீட்டில் உள்ள டிவியில் பார்த்து ரசித்துள்ளான்.
தாயின் உடலுடன் இரண்டு நாட்களாக சிறுவன் வீட்டிலிருந்த நிலையில், அழுகிய உடலிலிருந்து துர்நாற்றம் வீசியதால், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனுர். இதனையடுத்து நடத்திய விசாரணையில் இந்த விஷயங்களை சிறுவன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், போலீசார் மேலும் நடத்திய விசாரணையில், நள்ளிரவில் சிறுவனால் சுடப்பட்ட அந்த தாய், அதிகாலைவரை உயிருடன் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
தாயார் இறந்துவிட்டரா இல்லை, உயிருடன் இருக்கிறாரா என்று தாயின் உடல் கிடந்த அறையை அடிக்கடி சிறுவன் திறந்துப் பார்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒருவேளை யாரிடமாவது சிறுவன் இந்த தகவலை தெரிவித்திருந்தால், அவனது தாயார் உயிருடன் மீட்கப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
மேலும், தனது நண்பர்களை வீட்டுக்கு அழைத்த சிறுவன், அவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி தாயின் உடலை அப்புறப்படுத்த உதவி கோரியுள்ளதும், இந்த விஷயங்களை வெளியில் சொல்லாமல் இருக்க நண்பர்களுக்கு 5,000 ரூபாய் கொடுப்பதாக பேரம் பேசியதாக சிறுவன் தெரிவித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட தாய் உயிருக்கு போராடிய நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து சிறுவன் படம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM