இடிக்கப்படும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் நிர்வாகத்தின் கல்யாண மண்டபம் – பின்னணி என்ன?

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இந்த கோயில் நிர்வாகம் அறக்கட்டளை மூலம் மேல்மருவத்தூரில் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வணிக நோக்கத்தில் செயல்பட்டு வருவதாக அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா என்பவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கடந்த 2015-ம் ஆண்டு மனு அளித்துள்ளார். அதேபோல, சில பொதுமக்களும் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம்

ஆனால், அவரின் மனு மீது அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி, 2018-ம் ஆண்டு வழக்கு ஒன்றை தொடுத்தார். இந்த வழக்கு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையனுக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, ஆக்கிரமிப்பு தொடர்பாக சில ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி நிர்வாகத்துக்கு சொந்தமான கல்யாண மண்டபத்தின் சுற்றுச்சுவர் மட்டுமே ஏரியில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், அதிகாரிகள் கொடுத்த தகவல் அறிக்கை (Status Report) தவறு என நீதிபதிகள் கண்டித்துள்ளனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்டது, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் வழக்கு விசாரணை தள்ளிப் போனது.

இந்த வழக்கு விசாரணை 2022-ம் ஆண்டு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மேல்மருவத்தூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களின் தற்போதைய நிலை மற்றும் ஆக்கிரமிப்பாளர்களின் விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி ஆக்கிரமிப்பு தொடர்பாக விரிவான விவரங்களைச் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்தார். அதில், நீர்நிலைகள் உட்பட 93 அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையில், சர்வே எண் 59,47,10,13 உள்ளிட்டவை கோயில் நிர்வாகம் ஆக்கிரமிப்பு எனவும் 157, 190 சர்வே எண்கள் பொதுமக்களின் ஆக்கிரமிப்புகள் என மொத்தம் 93 ஆக்கிரமிப்பு இடங்கள் என குறிப்பிடப்பட்டிருந்தன. இதனையடுத்து, ஏப்ரல் மாதத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

ஆனால், ஆக்கிரமிப்புகள் எதுவும் அகற்றப்பட்டதாகத் தெரியவில்லை. இந்நிலையில் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பாக ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம், ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை ஜூன் 10-ம் தேதிக்குள் அகற்றிவிட்டு, 15-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என செங்கல்பட்டு கலெக்டருக்கு கடந்த வாரம் உத்தரவிட்டது. அதன்படி, ஆதிபராசக்தி கோயில் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்றி வருகிறது. ஆனால், பணி முழுமையாக நடைபெறவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த வெற்றி கண்ட ராஜா கூறுகிறார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராஜா-வை தொடர்பு கொண்டு பேசினோம்… “ஆதிபராசக்தி கோயில் நிர்வாகம் மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிப்புக்குள் உள்ள திருமண மண்டபத்துக்குள் கார் பார்க்கிங், கட்டணக் கழிப்பிடம், ஜெனரேட்டர் அறை உள்ளிட்ட எதற்கும் தடையில்லா சான்று பெறவில்லை.

சமூக ஆர்வலர் ராஜா

இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயன் இல்லை என்பதால், நீதிமன்றத்தை நாடினேன். நீதிமன்றமும் நல்ல தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், அதிகாரிகள் பொதுமக்களின் ஆக்கிரமிப்புகளே அகற்றுகிறார்கள். அதுவும் நல்லதுதான். ஆனால், சாமானியனுக்கு ஒரு நீதி, ஆதிபராசக்தி அறக்கட்டளைக்கு ஒரு நீதியா?. திருமண மண்டபத்தின் 80 சதவிகித பகுதி ஆக்கிரமிப்புதான். ஆனால், பெயரளவுக்குத்தான் இடித்துள்ளனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது நிர்வாகம் கூடுதல் அவகாசம் கேட்டதால், இடிப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறுகிறார்கள். இந்த தீர்ப்பை வாங்குவதற்குள் 9 முறை என்னைக் கொலை செய்யச் சிலர் முயன்றனர். அவற்றைக் கடந்தும் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை முழுமையாகச் செயல்படுத்தாதது, மிக வருத்தமாக உள்ளது” என்றார்.

ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றி வரும் 15-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றப்படுமா அல்லது தாமதப்படுத்தப்படுமா என்று ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.