புதுடெல்லி,
டென்னிஸ் தொழில்முறை விளையாட்டு வீரர்களின் கூட்டமைப்பு (ஏ.டி.பி.) என்ற பெயரிலான அமைப்பு ஆடவர் பங்கேற்கும் டென்னிஸ் போட்டிகளை, நடத்துகிறது. இந்நிலையில், இந்த போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஆச்சரியமளிக்கும் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
வருகிற 2023ம் ஆண்டு முதல் ஆடவர் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டியின் லாபங்களை வீரர்கள் மற்றும் போட்டி நடத்துவோர் 50-50 என்ற முறையில் பகிர்ந்து கொள்வார்கள் என ஆடவர்களுக்கான போட்டிகளை நடத்தும் சர்வதேச நிர்வாக அமைப்பு ஆனது அறிவித்து உள்ளது.
நீண்டகாலத்திற்கு வெளிப்படை தன்மையற்று காணப்பட்ட நிலையால், வீரர்கள் மற்றும் போட்டி நடத்துவோரிடையே இணக்கமற்ற சூழ்நிலை இருந்து வந்தது. கொரோனா பெருந்தொற்றால் பரிசு தொகையையும் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால், சூழ்நிலை மீண்டும் மோசமடைந்தது. இந்நிலையில், பல சீர்திருத்தங்களை ஏ.டி.பி. அமைப்பு கொண்டு வந்துள்ளது. அதற்கு வாரியத்தின் ஒப்புதலையும் பெற்று உள்ளது.
அதன்படி, வீரர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகையையும் உயர்த்துவது என முடிவாகி உள்ளது. இதுதவிர ஆண்டு முடிவில் வழங்கப்படும் போனஸ் தொகையை இரட்டிப்புடன் வழங்கவும் மற்றும் டாப் 30 வீரர்களுக்கு அதனை வினியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு வரை டாப் 12 வீரர்களுக்கே போனஸ் வழங்கப்பட்டது.
இந்த புதிய லாப பகிர்வு நடைமுறையால், 140 வீரர்கள் பலன் பெறுவார்கள். போட்டிகளின் நிதி சார்ந்த செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும். இதற்கு வீரர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.