படத்தை வெளியிடுங்கள் ; துல்கர் சல்மானிடம் பீஸ்ட் நடிகர் கோரிக்கை
துல்கர் சல்மான் ஒருபக்கம் ஹீரோவாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் வித்தியாசமான படைப்புகளுடன் வரும் இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரும் விதமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் அவரது நிறுவனம் தயாரித்துள்ள படம் 'அடி'. இந்த படத்தில் ஷைன் டாம் சாக்கோ கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் தீவிரவாதிகளில் ஒருவராக, அப்ரூவராக மாறுபவராக நடித்திருந்தார்.
இந்தப்படத்தில் கதாநாயகியாக ஆஹானா கிருஷ்ணா நடித்துள்ளார். வலிமி படத்தில் நடித்த துருவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அன்வேஷனம் மற்றும் லில்லி ஆகிய படங்களை இயக்கிய ரிஷோப் விஜயன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2020-லேயே முடிவடைந்து விட்டது. ஆனால் இன்னும் ரிலீசுக்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் படத்தின் நாயகன் டாம் சாக்கோ, துல்கர் சல்மானுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “என்னுடைய அன்பு நண்பர் துல்கர் சல்மானுக்கு.. இந்த படத்தை நான் முழு மனதுடன் செய்திருக்கிறேன்.. மேலும் இதை திரையரங்கில் பார்ப்பதற்காக காத்திருக்கிறேன்.. அதுமட்டுமில்ல நாயகியான ஆஹானா மற்றும் துருவன் ஆகியோரின் நடிப்பையும் கூட.. சாரி எப்படி நமது குரூப் திரைப்படம் கேரள அரசு விருது கமிட்டியால் புறக்கணிக்கப்பட்டதோ அதுபோல திறமைசாலிகள் புறக்கணிக்கப்படும்போது உண்டாகும் வலி என்ன என்பது உங்களுக்கே தெரியும்., உங்களிடம் இருந்து நல்ல பதிலுக்காக காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார் ஷைன் டாம் சாக்கோ.
துல்கர் சல்மானுடன் குருப் படத்தில் அவரது நண்பராக இணைந்து நடித்த அந்த நட்பின் அடிப்படையில் ஷைன் டாம் சாக்கோ இந்த கோரிக்கையை வைத்துள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் அவரது இந்த பதிவு மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.